ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு

ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க இடம் தேர்வு செய்வதற்காக டெல்லியில் இருந்து வந்த மத்திய தொல்லியல் துறையினர் ஆதிச்சநல்லூரில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். உலக நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம்…

ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க இடம் தேர்வு செய்வதற்காக டெல்லியில் இருந்து வந்த மத்திய தொல்லியல் துறையினர் ஆதிச்சநல்லூரில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

உலக நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2020ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதனையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய தொல்லியல் துறையினர் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்ய வருகை தந்தனர். பின்னர், ட்ரோன் மூலம் ஆதிச்சநல்லூர் பகுதியை ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் டெல்லியில் இருந்து மத்திய தொல்லியல் துறை இயக்குநர் அஜய் யாதவ், இணை இயக்குநர் சஞ்சய் மஞ்சுர், மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல கண்காணிப்பாளர் அருண் ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் ஆதிச்சநல்லூருக்கு வருகை தந்தனர். பின்னர் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் மத்திய தொல்லியல் துறை வசம் உள்ள 114 ஏக்கர் பரம்பு பகுதியில் ஆய்வு செய்தனர். பின்னர் புளியங்குளம் பகுதியில் உள்ள தகவல் மையத்தில் கடந்த வருடம் மாநில அரசு சார்பில் நடந்த அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால பொருட்களை பார்வையிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.