அரக்கோணம் சால்பேட்டையில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் தனியார் பள்ளிக்கு இணையாக மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சியுடன் பள்ளி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சுவால்பேட்டையில் நகராட்சி தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 34 மாணவர்கள் மட்டுமே படித்து வந்த நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் நிர்மலா மற்றும் துணை தலைமை ஆசிரியர் வினோத் குமாரின் முயற்சியால் மாணவர்களின் பெற்றோர் மற்றும் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டது.
மேலும் தனியார் பள்ளிக்கு இணையாக சில வசதிகளும் செய்து தரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இப்பள்ளியில் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் இப்பள்ளியின் உட்கட்டமைப்பு மற்றும் கற்றல் திறனை நன்கு அறிந்து அவர்களும் தங்களது பிள்ளைகளை நகராட்சி தொடக்கப் பள்ளியில் சேர்த்தனர். இதனால் இப்பள்ளியில் தற்போது 74 மாணவர்கள் படிக்கின்றனர்.
இந்நிலையில், தனியார் பள்ளிக்கு இணையாக பள்ளி ஆண்டு விழா நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக அரக்கோணம் டவுன்ஹால் மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. குறிப்பாக ஆஸ்கார் விருது பெற்ற ஆர்.ஆர்.ஆர் படத்தின் “நாட்டு நாட்டு“ பாடலுக்கு மாணவர்கள் நடனம் ஆடி பெற்றோர்களையும், பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் லட்சுமி பாரி, கவுன்சிலர் நித்யா ஷியாம்குமார், டாக்டர்கள் பன்னீர்செல்வம், ராவணன் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
—ரூபி.காமராஜ்







