வழக்கறிஞர் நியமனம் – விரிவான பதில் மனு தாக்கல் செய்ய தமிழ் நாடு அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு…!

அரசு வழக்கறிஞர் நியமனம் தொடர்பான வழக்கில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய தமிழ் நாடு அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சியமைத்துள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு நீதிமன்றங்களுக்கான புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் உச்ச நீதி​மன்றம், சென்னை உயர் நீதி​மன்​றம், உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு மற்றும் மாவட்ட நீதி​மன்​றங்​களில் கூடு​தல் அட்​வகேட், கூடு​தல் அரசு வழக்​கறிஞர், சிறப்பு அரசு வழக்​கறிஞர்​கள், அரசு வழக்​கறிஞர்​கள் என 204 பதவி​களைக் கேட்​டு, சட்​டத்​துறை அமைச்​சர் நிர்மல்குமாருக்கு காங்​கிரஸ் சார்​பில் கடிதம் அளிக்​கப்​பட்​டது.

இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அம்மனுவில், தமிழ் நாட்டில் உள்ள உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் அரசு சார்பாக வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறது. இதில் அரசு அரசியல் தலையீடு உள்ளது.

தற்போதைய ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சியில் இருக்கக்கூடிய ஒரு அரசியல் கட்சி (காங்கிரஸ்) கட்சி எந்தெந்த நீதிமன்றங்களில் யார் யாரை நியமிக்க வேண்டும் என தனது கட்சிக்காரர்களை அறிவித்துள்ளது. அது அனைத்து சமூக வலைதளங்களிலும் தற்போது பரவி வருகிறது. இது முற்றிலும் சட்ட விரோதம். அரசியல் தலையீடு இல்லாமல் உரிய தகுதி உடைய வழக்கறிஞர்களை நியமனம் செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சதீஷ்குமார் ஜோதி ராமன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் சரவணன் ஆஜராகி, இந்த கடிதத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள நபர்கள் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட மாட்டார்கள் என உறுத்தி அளித்தார். இருந்தும் அரசு தரப்பில் இந்த கடிதம் குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.