“திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது தீபத்தூண் அல்ல; எல்லைக் கல்!” – மாவட்ட ஆட்சியர் தரப்பு வாதம்!

திருப்பரங்குன்றத்தில் உள்ள கல் தூண் இன்றுவரை நில அளவீட்டுக் கல்லாகவே பயன்படுத்தப்பட்டு வருவதாக உச்சநீதிமன்றத்தில் மாவட்ட ஆட்சியர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிபதி அரவிந்த் குமார் தலைமையிலான அமர்வில் நேற்று தொடங்கிய விசாரணை, இன்றும் தொடர்ந்து நடைபெற்றது. 

தீபத்தூண் அல்ல; எல்லைக் கல்!

மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், கோயிலுக்கு அருகே உள்ள இடத்தில்தான் நூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தீபம் ஏற்றப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். ஆனால், அந்த நடைமுறையைத் தவிர்த்து தர்கா அருகே உள்ள கல் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என மனுதாரர் கோருவதாகக் குறிப்பிட்டார்.

மேலும், ஆவணங்களின்படி அந்தக் கல் தூண் தீபத்தூண் அல்ல என்றும், அது நிலத்தின் எல்லையை உறுதி செய்வதற்காக அமைக்கப்பட்ட எல்லைக் கல் என்றும் வாதிட்டார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மலைப்பகுதிகளில் நிலத்தை அளவீடு செய்வதற்கு இதுபோன்ற கல் தூண்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

சென்னையில் உள்ள பரங்கிமலை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மலைப்பகுதிகளிலும் இதுபோன்ற நில அளவீட்டுக் கல் தூண்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், சில தூண்கள் கோயில் விரிவாக்கத்தின்போது கோயிலுக்குள் சென்றதாகவும், சில வழிபாட்டுத் தலங்களாக மாறியதாகவும், வேறு சில கைவிடப்பட்டதாகவும் விளக்கினார். ஆனால், திருப்பரங்குன்றத்தில் உள்ள கல் தூண் இன்றுவரை நில அளவீட்டுக் கல்லாகவே பயன்படுத்தப்பட்டு வருவதாக வாதிட்டார்.

தீபத்தூண் கோயிலுக்குச் சொந்தமானதா? நீதிபதிகள் கேள்வி

தொடர்ந்து, அந்தக் கல் தூண் பார்ப்பதற்குத் தீபத்தூண் போல இருப்பதால் மட்டுமே அதில் தீபம் ஏற்ற வேண்டும் எனக் கோருவதாகவும், உண்மையில் அது தீபத்தூண் அல்ல என்றும் மாவட்ட ஆட்சியர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதற்கான ஆதாரமாக ஆங்கிலேயர் ஆட்சிக் கால ஆவணங்கள் முதல் சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகள் வரை சமர்ப்பித்துள்ளதாகவும் கூறினார்.

மேலும், தீபத்தூண் எனக் கூறப்படும் பகுதி கோயில் நிர்வாகத்திற்குச் சொந்தமானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றும், அதே நேரத்தில் அந்தப் பகுதிக்குச் செல்லும் வழிகள் தர்கா நிர்வாகத்திற்குச் சொந்தமானவை என்றும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தீபத்தூண் அமைந்துள்ள பகுதி கோயில் நிர்வாகத்திற்குச் சொந்தமானதா, இல்லையா எனக் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த மாவட்ட ஆட்சியர் தரப்பு வழக்கறிஞர், அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிவிப்பதாகக் கூறினார்.

இதனால் அதிருப்தியடைந்த நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் அந்த இடம் கோயிலுக்குச் சொந்தமானதா, இல்லையா என்பதை ஒரே வார்த்தையில் தெரிவிக்குமாறு மீண்டும் கேள்வி எழுப்பினர்.

அப்போது எதிர்மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், மாவட்ட ஆட்சியருக்கே இந்த விவகாரம் குறித்த தகவல் தெரியவில்லை எனக் கேள்வி எழுப்பினார். இதையடுத்து, அந்த இடம் கோயில் நிர்வாகத்திற்குச் சொந்தமானதுதான் எனத் தெரிவிக்குமாறு தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், மாவட்ட ஆட்சியர் தரப்பு வழக்கறிஞரிடம் கூறினார்.

இதற்குப் பதிலளித்த மாவட்ட ஆட்சியர் தரப்பு, ஆட்சியர் என்ற முறையில் அங்குள்ள நிலவரம் மற்றும் ஏற்கெனவே நிலவும் விவகாரங்கள் குறித்தே தன்னால் தெரிவிக்க முடியும் என்றும், நில அளவை மற்றும் அந்த இடத்தின் உரிமை தொடர்பாக வருவாய்த் துறையும் தமிழக அரசும்தான் விளக்கமளிக்க முடியும் என்றும் தெரிவித்தது.

தர்கா தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம்

இதற்கிடையே, சிக்கந்தர் தர்கா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் நெல்லித்தோப்பு தர்கா என அழைக்கப்படும் சிக்கந்தர் தர்கா பல நூற்றாண்டுகளாக இருந்து வருவதாகத் தெரிவித்தார். இது முழுமையான மசூதி அல்ல என்றும், இஸ்லாமிய மதகுருமார்களுக்காக அமைக்கப்படும் தர்கா என்றும் விளக்கினார்.

மேலும், அந்த இடத்தின் உரிமை மன்னர்கள் காலம் தொடங்கி ஆங்கிலேயர் ஆட்சி மற்றும் இந்திய அரசாங்கத்தின் காலம் வரை தர்காவுக்குச் சொந்தமானதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதற்கான ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

கடந்த 1862 மற்றும் 1912ஆம் ஆண்டுகளில் தர்காவுக்குச் சொந்தமான நிலப்பகுதிகளில் மாற்று மத நடவடிக்கைகளை மேற்கொள்ள சிலர் முயன்றபோது, அப்போதைய ஆட்சியாளர்களும் நீதிமன்றங்களும் பொது அமைதி உள்ளிட்ட காரணங்களைக் கருத்தில் கொண்டு அவற்றைத் தடுத்ததாகவும் வாதிட்டார்.

நெல்லித்தோப்பு முதல் தர்கா வரையிலான இடம் தர்காவுக்குச் சொந்தமானது என்றும், கோயில் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார். 1862 முதல் 1923ஆம் ஆண்டு வரையிலான உத்தரவுகள் தற்போதைய பாரம்பரிய நடைமுறையை உறுதிப்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், நெல்லித்தோப்பு, புதுமண்டபம், படிக்கட்டுகள், தர்கா அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகே உள்ள கொடியேற்றும் இடம் உள்ளிட்ட அனைத்தும் தர்காவுக்குச் சொந்தமானவை என்றும் தர்கா தரப்பில் வாதிடப்பட்டது.

மலை உச்சியில் தர்கா அமைந்துள்ள நிலையில், அங்கு தற்போது நிலவும் நிலையே தொடர வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

நாளை மீண்டும் விசாரணை

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், திருப்பரங்குன்றம் கல் தூண் வழக்கில் இடைக்கால உத்தரவு தொடர்பான வாதங்களைச் சுருக்கமாக முன்வைக்குமாறு அனைத்து தரப்பினரையும் வலியுறுத்தினர். இதையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நாளை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.