ஆளுநர் குறித்த உச்சநீதிமன்ற கருத்து நீட்டுக்கும் பொருந்தும் – திமுக

அமைச்சரவையின் ஒவ்வொரு முடிவிற்கு எதிராகவும், ஒரு மாநில ஆளுநர் செல்வார் என்றால் அது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக மிகப்பெரிய பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என உச்சநீதிமன்றம் கூறியிருப்பது நீட் உள்ளிட்ட விவகாரங்களுக்கும் பொருந்தும் என…

அமைச்சரவையின் ஒவ்வொரு முடிவிற்கு எதிராகவும், ஒரு மாநில ஆளுநர் செல்வார் என்றால் அது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக மிகப்பெரிய பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என உச்சநீதிமன்றம் கூறியிருப்பது நீட் உள்ளிட்ட விவகாரங்களுக்கும் பொருந்தும் என திமுக கருத்து தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்று வரும் பேரறிவாளன், தாம் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை பெற்று வருவதாகவும், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எழுவரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை முடிவெடுத்த பின்னரும், ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாகவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆளுநரின் நடவடிக்கைக்கு தமது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.  அமைச்சரவையின் ஒவ்வொரு முடிவிற்கு எதிராகவும், ஒரு மாநில ஆளுநர் செல்வார் என்றால் அது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக மிகப்பெரிய பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த திமுக தலைமை கழக வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ, உச்சநீதிமன்றத்தின் கருத்து ஜனநாயக நாட்டில் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என்றும், ஆளுநர் அதிகாரங்கள் என்பது ஒரு அமைச்சர் மீது கிரிமினல் வழக்கு தொடர அனுமதி கேட்கும்போது, அமைச்சரவை உட்பட யாருடைய ஒப்புதலும் இல்லாமல் முடிவெடுக்கலாம். அதேபோல் சட்டப்பிரிவு 356 கீழ் நடவடிக்கை எடுக்கும்போது யாருடைய அனுமதியும் இல்லாமல் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கலாம் என்று குறிப்பிட்டார்.

அதை தவிர நீட் உள்ளிட்ட மசோதாக்களில் அமைச்சரவை எடுக்கும் முடிவை நிறுத்தி வைக்கவோ, குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருவது அரசியலமைப்பு  சட்டத்திற்கு எதிரானது என்று சுட்டிக்காட்டிய அவர்,

“இதனை புரிந்து கொண்டு ஆளுநர் நடந்து கொள்ள வேண்டும். தற்போது உச்சநீதிமன்றத்தின் கருத்து நீட் உள்ளிட்ட விவகாரங்களுக்கும் பொருந்தும், முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றியாகதான் இதனையும் பார்க்கிறோம்” எனக் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.