சினிமாவில் வாய்ப்பு வழங்குவதாகக் கூறி தன்னை நடிகர் விஜய்பாபு பாலியல் வன்கொடுமை செய்ததாக கேரள மாநிலத்தின் பிரபல நடிகை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
நடிகரும், தயாரிப்பாளருமான விஜய்பாபு மீது கேரள மாநிலத்தில் பிரபல நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.சினிமாவில் வாய்ப்பு வழங்குவதாகக் கூறி மார்ச் 13,14 ஆம் தேதியன்று மது, போதைப் பொருள்கள் கொடுத்து தன்னை விஜய்பாபு பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த நடிகை போலீஸில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின்பேரில் எர்ணாகுளம் தெற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில்,நடிகர் விஜய்பாபு தனது ஃபேஸ்புக் லைவில் இப்பிரச்னை தொடர்பாக பேசுகையில், பாலியல் புகார் அளித்த அந்த நடிகையின் பெயரைக் கூறியதாக் கூறப்படுகிறது. பாலியல் புகார் அளித்த பெண்களின் பெயரை பொதுவெளியில் பயன்படுத்தக் கூடாது என்பது விதிமுறை.ஆனால், நடிகர் விஜய்பாபு சம்பந்தப்பட்ட நடிகையின் பெயரை ஃபேஸ்புக் லைவில் கூறியதால் அதற்கென போலீஸார் மற்றொரு வழக்குப் பதிவு செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஃபேஸ்புக் லைவின்போது நடிகர் விஜய்பாபு பேசுகையில், பாலியல் புகார் அளித்த அந்த நடிகை மன அழுத்தத்தில் இருந்தார். என்னைச் சந்திக்க வேண்டும் எனவும் கூறினார். இந்நிலையில், அவர் புகார் அளித்ததால் தனது மனைவி, அம்மா, நண்பர்கள் மிகுந்த வருத்தத்தில் இருக்கின்றனர். இதன் மூலம் வரும் வழக்கை நான் சந்திக்கிறேன். அந்த நடிகை என்னுடன் சாட் செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. அவர் மீது மான நஷ்ட வழக்குத் தொடருவேன் எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில், அந்த நடிகையை மிரட்டும் வகையில் விஜய்பாபு பேசியதாக பல்வேறு தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். கேரள மாநிலத்தின் பிரபல நடிகை அளித்துள்ள இந்தப் பாலியல் புகார் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








