பிரதமர் மோடி ஐரோப்பிய நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பிறகு இதுவரை 62 முறை பல்வேறு உலக நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டிருக்கிறார். இறுதியாக 2021ம் ஆண்டில் அக்டோபர் 29 முதல் நவம்பர் 2ம் தேதி வரை இத்தாலி, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் 63வது பயணமாக மே மாதம் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை ஜெர்மனி, டென்மார்க், மற்றும், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
டென்மார்க் பிரதமர் மேட்டே பிரெடெரிக்சன் அழைப்பின் பேரில் அந்நாட்டுக்கு பிரதமர் மோடி செல்கிறார். அங்கு நடக்கும் 2-வது இந்தியா- நார்டிக் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இதில் ஐஸ்லாந்து, நார்வே, சுவீடன், பின்லாந்து ஆகிய நாட்டு பிரதமர்களுடன் கலந்துரையாடுகிறார். மேலும் டென்மார்க்கில் வசிக்கும் இந்தியர்களுடனும் உரையாடுகிறார்.
அதைத்தொடர்ந்து, அண்மையில் நடைபெற்ற பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அதிபர் இம்மானுவேல் மேக்ரானை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார். மேலும், இந்தியா-பிரான்ஸ் இடையேயான இருதரப்பு கலந்துரையாடல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷால்ஸை சந்திக்கும் பிரதமர் மோடி இந்தியா-ஜெர்மன் இடையேயான இருதரப்பு பேச்சுவரத்தையில் பங்கேற்க உள்ளார். பின்னர், ஜெர்மனியில் உள்ள இந்தியர்களுடன் கலந்துரையாடுகிறார்.
இவை தவிர, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது, ரஷ்யா-உக்ரைன் விவாகரம், சுற்றுசூழல்-காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.








