ஓராண்டாக போராடும் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம்! டிடிவி தினகரன் நேரில் ஆதரவு!

சென்னையை அடுத்த பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 365 நாளாக போராட்டம் நடத்தும் ஏகனாபுரம் கிராம மக்களை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். சென்னையின் இரண்டாவது…

சென்னையை அடுத்த பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 365 நாளாக போராட்டம் நடத்தும் ஏகனாபுரம் கிராம மக்களை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள 13 கிராமங்களை சேர்த்து, 4,750 ஏக்கரில் அமைய உள்ளதாக மத்திய அரசு அறிவித்து, அதற்கான ஒப்புதலும் வழங்கியது. இதையடுத்து, இந்தப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், விவசாய நிலங்கள், நீர்நிலைகள், பம்பன் கால்வாய் உள்ளிட்ட பலவற்றை இழக்கும் அபாயம் உள்ளதாக கூறி பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு, எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம், நெல்வாய் குணகரம்பாக்கம், மேலேரி உள்ளிட்ட 12 கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு வருட காலமாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கிராமங்களில் உள்ள விவசாயம் மற்றும் தொழிற்சாலை பணிகளுக்கு செல்வதால் இரவு நேரங்களில் தங்களது கண்டன ஆர்ப்பாட்டத்தை பதிவு செய்து வருகினறனர். இது மட்டுமில்லாது ஏகனாபுரத்தில் ஏற்கனவே ஆகஸ்ட், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டங்களில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கூடாது என்றும், இந்த திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்றும் எதிர்ப்பு தெரிவித்து ஒருமனதாக தீர்மானங்களை நிறைவேற்றினர். பள்ளிகளுக்கு மாணவ, மாணவியர்களை அனுப்பாமலும் போராட்டம் நடத்தினர்.

அடுத்த கட்டமாக மொட்டை அடித்து பட்டை நாமம் போட்டும் , ஏரிகளில் இறங்கியும் , ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி ஆர்ப்பாட்டம் என பலவற்றில் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இந் நிலையில் இவர்களுக்கு ஆதரவாக திருமாவளவன், சீமான், ஜெகன் மூர்த்தி , தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் என பல அரசியல், சமூக ஆர்வலர்கள் இவர்களுக்கு ஆதரவாக கைகோர்த்தனர். இறுதியாக அரசு அமைத்த மச்சநாதன் தலைமையிலான குழுவினரும் இப்பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போதும் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர். இருப்பினும் ஒரு வருட காலமாக தொடர்ந்து எதிர்ப்பு நிலையை பதிவு செய்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இவர்களது போராட்டம் இன்றுடன் ஒரு வருடத்தை எட்டுகிறது.

இந்நிலையில் 365 வது நாள் போராட்டத்தில் கலந்துகொண்டு தனது ஆதரவை பதிவு செய்ய அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று ஏகனாபுரம் கிராமத்திற்கு வருகை தந்தார். அப்போது அம்பேத்கர் சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களிடத்தில் சிறப்புரை ஆற்றி இவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது;

காஞ்சிபும் மாவட்டம் பரந்தூர், ஏகனாபுரம் மற்றும் தன சுற்றுவட்டார கிராமங்களில் நன்செய் நிலமாக இருக்கலாம். புன்செய் நிலமாக இருக்கலாம். ஏதுவாக இருந்தாலும் இந்த பகுதி மக்கள் நம்பியிருக்கின்ற விவசாயமாக இருக்கட்டும், சுயசார்பு தொழிலாக இருக்கட்டும். இவை அனைத்தையும் அளித்து விட்டு அப்படி விமான நிலையம் அமைக்க வேண்டுமா என்பதுதான் இங்கு எல்லோருக்கும் கேள்வியாக உள்ளது. இங்கு 13 கிராம மக்களும் ஒருங்கிணைந்து எந்த ஒரு அரசியல் பின்புலமும் இன்றி கடந்த ஓர் ஆண்டாக போராடி வருகிறீர்கள். உங்களுக்கு எனது வாழ்த்துகள்.

இங்கு விமான நிலையம் வந்தால் இங்கு இருக்கும் ஏகனாபுரம் என்ற ஊர் இந்திய வரைபடத்திலே இல்லாமல் போய்விடும். அதை ஒருபோதும் யாரும் விரும்ப மாட்டார்கள். அதிலும் இந்த ஒற்றிலேயே பிறந்து வளைந்த உங்களுக்கு நிச்சயம் மிகுந்த மனவலியை கொடுக்கும். சரவதேச விமான நிலையங்கள் கொண்டு எத்தனையோ இடங்கள் உள்ளன. மதுரை மக்கள் எங்களுடைய விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். அதேபோல் திருச்சி, கோவை மக்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.அவற்றையெல்லாம் தரம் உயர்த்த முயற்சி செய்யலாம்.

அதே போல் சென்னையிலும் பயன்பாடு இல்லமால் எவ்வளவோ அரசின் தரிசு நிலங்கள் கிடக்கின்றன. அவற்றையெல்லாம் விட்டுவிட்டு விவசாய நிலத்தை அளிக்க முயற்சிப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. உங்களின் இந்த போராட்டத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எப்போதும் துணை நிற்கும். நீங்கள் போராட்டத்தில் இருந்து பின் வாங்க கூடாது. நிச்சயம் உங்கள் போராட்டத்திற்கு வெற்றி கிடைக்கும். உறுதியோடு இருங்கள்.

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.