கேந்திரிய வித்யாலயா 11-ம் வகுப்பு துணை தேர்வு: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு தேர்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத் தேர்வு நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு தேர்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத் தேர்வு நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்தவர்கள், துணைத்தேர்வு எழுத அனுமதிக்கப்படும் நிலையில், ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்கள் துணைத்தேர்வு எழுத அனுமதிப்பதில்லை எனக் கூறி ஏராளமான மாணவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இதனை விசாரித்த தனி நீதிபதி, கேந்திரிய வித்யாலயாவில் 11-ஆம் வகுப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஒருமுறை நடவடிக்கையாக மூன்று வாரங்களில் துணைத்தேர்வு நடத்த வேண்டும் என கேந்திரிய வித்யாலயா சங்கதனுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களுக்கு துணைத்தேர்வு எழுத அனுமதியில்லை என விதிகள் உள்ளதாக தனி நீதிபதியிடம் தெரிவித்த நிலையில், அதனை ஏற்காமல், அவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

வேறுபள்ளியில் சேர மாற்றுச் சான்று பெறுவதற்காகவே உயர் நீதிமன்ற உத்தரவின்படி குறிப்பிட்ட ஒரு மாணவிக்கு மட்டும் 2018-ம் ஆண்டு துணைத் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டதாகவும், அந்த உத்தரவு இந்த வழக்குக்கு பொருந்தாது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று மீணடும் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு தேர்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத் தேர்வு நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.