மணிப்பூர் பழங்குடியின பெண்கள் பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக விதி 267-ன் கீழ் திமுக எம்பி வில்சன் மாநிலங்களவையில் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் கொடுமை செய்தது தொடர்பான காணொலி வெளியானது. இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளே (ஜூலை 20) மணிப்பூர் பிரச்னையை விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. இதனால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
இதே போல் அடுத்த நாளும் இதே விவகாரம் எழுப்பப்பட்டதால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. அமளியில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் இந்த கூட்டத் தொடர் முழுவது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் நோட்டீஸ் அளித்திருந்தன. ஆனால் அவை கூடியதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவையும், மாநிலங்களவையும் நேற்று ஒத்திவைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்றும் தொடங்கிய உடனே கடும் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் மாநிலங்களவையில் திமுக எம்பி வில்சன் 267வது விதியின் கீழ் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
அவர் வழங்கியுள்ள நோட்டீஸில் மணிப்பூர் மாநிலத்தின் நிலை குறித்து, நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விவாதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அதே போல அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய நாடாளுமன்றக் குழுவை அனுப்பி, மணிப்பூரில் நிலவும் அமைதியின்மை, வன்முறை, இடையூறுகளுக்கான காரணங்கள் குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் வில்சன் எம்பி கேட்டுக் கொண்டுள்ளார்.
நாட்டில் நிலவும் முக்கியமான பிரச்னைகளை கருத்தில் கொண்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அன்றாட பணிகளை ஒத்திவைத்து விட்டு முக்கியமான பிரச்னைகளை விவாதிக்க அனுமதி வழங்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விதி 267ன் கீழ் நோட்டீஸ் வழங்கலாம். இதனை சபாநாயகர் ஒப்புதல் அளித்தால் விவாதம் நடத்தலாம்.
மணிப்பூர் வீடியோ விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகளில் உள்ள பல கட்சிகளின் பிரதிநிதிகளான மணீஷ் திவாரி, சஞ்சய் சிங் , திரிணாமூல் காங்கிரஸ், மக்களவையில் கனிமொழி எம்பி உள்ளிட்டோர் ஏற்கனவே 267வது விதியின் கீழ் நோட்டீஸ் வழங்கிய நிலையில் தற்போது வில்சன் எம்பி வழங்கியுள்ளார்.








