திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூர் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏடிஎம் மையங்களில் கேஸ் கட்டிங் இயந்திரத்தைப் பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து ரூ. 72 லட்சத்து 79 ஆயிரம் பணத்தை திருடர்கள் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி அதிகாலை கொள்ளையடித்தனர்.
தகவலறிந்தவுடன் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் உத்தரவுப்படி, வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முத்துசாமி மேற்பார்வையில், திருவண்ணாமலை. வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தீவிர விசாரணையில், இச்சம்பவத்தில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த 6 பேர்களுக்கு மேற்பட்டவர்கள் ஈடுபட்டதும், இவர்கள் கர்நாடகா மாநிலம், கோலார் பகுதியில் தங்கியிருந்து குற்றம் நடந்த பகுதிகளை ஏற்கனவே நோட்டமிட்டு அதன் பின்பு கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இவ்வழக்கில் ஏற்கனவே ஐந்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ. 5 லட்சம் பணத்தையும், இரண்டு கார்களையும் கைப்பற்றினர். இந்நிலையில், இன்று இவ்வழக்கில் தொடர்புடைய ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிராஜுதின் (50) என்பவரை கர்நாடகா மாநில எல்லை அருகே தனிப்படையினர் கைது செய்து கொள்ளைக்கு பயன்படுத்திய கண்டெய்னர் லாரியை பறிமுதல் செய்தனர்.
-ம.பவித்ரா





