வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், நஞ்சற்ற இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையிலும் “தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை 2023″-ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
அங்கக வேளாண்மை வரைவுக் கொள்கையை உருவாக்குதற்காக வேளாண்மை – உழவர் நலத் துறையின் அரசு சிறப்புச் செயலாளர் தலைமையில் ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, அங்கக வேளாண்மைக் கொள்கையினை வரையறுப்பதற்காக குழுக்கூட்டங்கள் அவ்வப்போது நடைபெற்றன.
அக்கூட்டங்களில், அங்கக வேளாண்மைக் கொள்கையினை வகுப்பதற்கான பல்வேறு திட்டப் பணிகள் குறித்து, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர், துறைத் தலைவர்கள், முன்னணி அங்கக விவசாயப் பிரிதிநிதிகள் மற்றும் அங்கக வேளாண்மை சார்ந்த அரசு சாரா நிறுவனத்தினர் ஆகியோர் ஆலோசனைகள், பிற மாநிலங்களில் அங்கக வேளாண்மையில் கையாளப்பட்டுவரும் நடைமுறைகள், அதன் சாதக பாதகங்கள் போன்றவை குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டு, அதனடிப்படையில் வரைவு அங்கக வேளாண்மை கொள்கை, செயல்திட்டம் மற்றும் விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம், அங்கக வேளாண்மையின் முக்கியத்துவத்தை தமிழ்நாட்டு விவசாயிகளிடையே அதிகரிக்கவும், நிலங்களில் ராசயன இடுபொருட்களின் பயன்பாட்டை படிப்படியாக குறைத்து, இயற்கை இடுபொருட்களை அதிகளவில் பயன்படுத்தவும், மண் வளத்தை மேம்படுத்துதல் போன்றவற்றிற்கு தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை வழிவகுக்கும்.
அங்கக வேளாண்மைக் கொள்கை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதில், அங்கக வேளாண்மைக் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். நிகழ்ச்சியில் வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் சி.சமயமூர்த்தி, வேளாண்மைத் துறை இயக்குநர் ஆ.அண்ணாதுரை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.







