வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசி வருகிறார்-அமைச்சர் பொன்முடி

தமிழகத்தின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கு முதலமைச்சர் எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தான் பிரதமரிடம் வலியுறுத்தினேன். இதனை பாஜக தலைவர் அண்ணாமலை கொச்சைப்படுத்துவார் என எதிர்பார்க்கவில்லை என உயர் கல்வித் துறை…

தமிழகத்தின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கு முதலமைச்சர் எடுக்கின்ற
நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தான் பிரதமரிடம்
வலியுறுத்தினேன். இதனை பாஜக தலைவர் அண்ணாமலை கொச்சைப்படுத்துவார் என எதிர்பார்க்கவில்லை என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

தமிழக முன்னாள் பாஜக தலைவரும் தற்போதைய மத்திய இணை அமைச்சருமான முருகனைப் போன்று அவரும் பெரிய பதவிகளுக்கு ஆசைப்படலாம் என அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார்.

விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்திலுள்ள ஊராட்சி முகமை அலுவலகத்தில்
வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி,
சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் மஸ்தான் தலைமையில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது:

திராவிடம் என்ற வார்த்தை 1800களில் தோன்றியதாக அண்ணாமலை கூறுகிறார். ஆனால்
திராவிட மாடல் என்பது திராவிட இயக்கமல்ல. சிந்து சமவெளி நாகரிகம் தோன்றியபோதே தோன்றியது. அதனை வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசி வருகிறார். அவர் தமிழக முதலமைச்சர் கல்வியை உயர்த்துவதற்கு எடுக்கின்ற
நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தான் பிரதமரிடம்
வலியுறுத்தினேன்.

மத்திய அரசு புதிய கல்வி கொள்கை என்று கூறுகிறது. தமிழ்நாட்டிற்கு என்று கல்விக் கொள்கை வளர்ப்பதற்கு தமிழக முதலமைச்சர் ஒரு குழுவை நியமித்து கொள்கையை உருவாக்க வேண்டும் என்று செயல்பட்டு கொண்டுள்ளார்.

அதற்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டுமென்று பிரதமரிடம் வலியுறுத்தினேன்.
தமிழ்நாட்டில் உயர்கல்வி என்பது உயர்திருக்கிறது. தரத்தை உயர்த்த வேண்டும்
என்பதால் நான் முதல்வன் என்ற திட்டத்தை தொடங்கி வைத்து அண்ணா
பல்கலைக்கழகத்தில் துறைகளுக்கிடையே இன்டர் டிசிபிளனரி என்ற புதிய
பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும் என ஆணையிட்டு இருக்கிறார்.

திராவிடம் வந்த பிறகுதான் எல்லாம் வந்ததாக கூறுகிறாரே அண்ணாமலை. அந்த காலத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் கல்வி அறிவு பெற முடியாமல் பள்ளிக்குள்ளே நுழைய முடியவில்லை. படிப்பதற்கு வாய்ப்பு இல்லாமலும் ஒரு சமுதாயத்தினர் மட்டுமே கல்வி அறிவு பெற்றனர். அனைத்து சமுதாயத்தினரும் ஆண்களும் பெண்களும் கல்வி அறிவு பெற வேண்டுமென்பது தான் திராவிடம் மாடல்.

பிரதமரிடம் நிதி அளிக்க வேண்டும் என்று நான் கேட்கவில்லை. முதலமைச்சர் எடுக்கும்
நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று தான் அன்பாக கேட்டுக் கொண்டேன்.
அதனையும் அவர் ஏற்றுக் கொண்டார். மத்திய அரசு நான்காண்டுகளில் உயர்கல்விக்கு
6664 கோடி தமிழக வழங்கியதாக கூறுகிறார்.

தமிழக அரசு மட்டும் ஒரு ஆண்டில் உயர் கல்விக்கு செலவு செய்த தொகை 5 ஆயிரத்து 666 கோடி. இதுபோன்று கல்விக்கு அதிகளவு செலவு செய்து வருகிறோம். மொழிக் கொள்கைகளைப் பற்றியும், சுதந்திரமாக செயல்பட விடுங்கள் என்று தான் கேட்கிறேன். பிரதமரிடம் நிதி உதவி கேட்கவில்லை. இதனை அண்ணாமலை புரிந்து கொள்ள வேண்டும்.

அடித்தட்டு மக்களுக்கும் பயன்பெற வேண்டும் என்று உழைப்பது தான் இந்த இயக்கம். திராவிட மாடல் ஆட்சி வந்த பிறகு தான் இந்தியாவில் தமிழகத்தில்தான் 53 சதவீதம் பேர் உயர்கல்வி பெற்றுள்ளனர்.

இதனை அண்ணாமலை கொச்சைப்படுத்துவோர் என எதிர்பார்க்கவில்லை. முருகனைப் போன்று பெரிய பதவிகளுக்கு அவரும் ஆசைப்படலாம் என்றார் அமைச்சர் பொன்முடி.

முன்னதாக, உயர் கல்வியில் மாணவர்களின் சேர்க்கையில் எண்ணிக்கையில் மட்டுமே கவனம் செலுத்தாமல் தரத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதை தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.