வன்முறையாளர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்: அதிபர் ரணில்

இலங்கையில் போராட்டங்களின் போது வன்முறையில் ஈடுபட்டவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்று அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இலங்கையில் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச வெளிநாட்டுக்கு தப்பியோடியதை அடுத்து, போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர்.…

இலங்கையில் போராட்டங்களின் போது வன்முறையில் ஈடுபட்டவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்று அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச வெளிநாட்டுக்கு தப்பியோடியதை அடுத்து, போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர். அவர்களில் பலர் அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி உள்ளனர். பலர் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதேபோல், பிரதமர் மாளிகைக்குள்ளும் நுழைந்து போராட்டக்காரர்கள் மாளிகைக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் பணி தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

எனினும், வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் பணி தொடரும் என அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

அமைதி வழியில் போராட்டம் செய்தவர்களுக்கு எதிராக எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்க முடியாது என தெரிவித்துள்ள அவர், அமைதி வழி போராட்டக்காரர்களை அன்றும் மதித்தேன் இன்றும் மதிக்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், போராட்டம் என்ற பெயரில் பொது சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தவர்களையும், அரச கட்டடங்களுக்குள் நுழைந்து பொருட்களை திருடியவர்களையும் மன்னிக்க முடியாது என ரணில் தெரிவித்துள்ளார்.

வன்முறையில் ஈடுபட்ட விவகாரத்தில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்றும், குற்றாவளிகளுக்கு எதிராக நீதிமன்றம் தண்டனையை வழங்கும் என்றும், இதில் எவரும் தலையிட முடியாது என்றும் அதிபர் தெரிவித்துள்ளார்.

இலங்கை ரூபவாஹினி நிறுவனத்துக்குள் அத்துமீறி நுழைந்து ஒளிபரப்பு சேவைகளுக்கு இடையூறு விளைத்தவர்களை எவ்வாறு மன்னிக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்கே, அவர்களை எவ்வாறு அகிம்சை வழி போராட்டக்காரர்கள் என்று கூற முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.