சீட் இருப்பதாக வரும் இ-மெயில்கள் குறித்து மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென அண்ணா பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது.
பொறியியல் கலந்தாய்வுக்கு வரும் 20ம் தேதி முதல் ஜூலை 19ம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார். சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 20 முதல் 31ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஆகஸ்ட் 8ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியீடு செய்யப்படவுள்ளது.
மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படை வீரர்களுக்கு ஆகஸ்ட் 16 முதல் 18ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறவுள்ளது. ஆகஸ்ட் 2 முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை பொது கலந்தாய்வும், அக்டோபர் 15,16ஆம் தேதிகளில் துணைக் கலந்தாய்வும் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில், “பல்கலைக்கழகத்தில் சீட் இருப்பதாகக் கூறி, முன்பணம் கேட்டு வரும் இ-மெயில்கள் போலியானது, NRI மாணவர்களை குறித்து இதுபோன்ற மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன. மாணவர் சேர்க்கை தொடர்பான தகவல்களுக்கு http://www.annauniv.edu என்ற பல்கலைக்கழக இணையதளத்தை மட்டுமே அணுக வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் இருக்கிறது, முதல் செமஸ்டர் கட்டணத்துடன் ரூ.1 லட்சம் கட்டினால் முற்றிலும் இலவசமாக படிக்கலாம் என்று பல மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுப்பியதாக சென்றுள்ள போலி இ-மெயில்கள் பற்றி மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.







