பொறியியல் கலந்தாய்வுக்கு வரும் ஜூன் 20 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு மீண்டும் நேரடி கலந்தாய்வை நடத்துவதா? ஆன்லைன் கலந்தாய்வா? எப்போது கலந்தாய்வை நடத்துவது என்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், அண்ணா பல்கலைக்கழகம், தனியார் பொறியியல் கல்லூரிகளின் நிர்வாகிகள் மற்றும் மாணவர் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி, கடந்த ஆண்டுகளில் பொறியியல் கல்லூரிகளில் அதிகமான மாணவர்கள் சேராத நிலை காணப்பட்டது. அண்ணா பல்கலையில் மட்டும் 631 இடங்கள் கடந்த ஆண்டு காலியாக இருந்தன. அதனை மாற்றியமைக்கும் வகையில், பொறியியல் கலந்தாய்வு திட்டமிடப்பட்டுள்ளது. பொறியியல் கலந்தாய்வுக்கு தங்கள் பள்ளிகளில், பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் விண்ணப்பிக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கு கடந்த வருடம் 50 இடங்கள் இருந்ததை 110 இடங்களாக உயர்த்தப்பட்டுள்ளன என்றார்.
பொறியியல் கலந்தாய்வுக்கு 20.06.22 இல் தொடங்கி 19.07.22 வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 20 முதல் 31ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஆகஸ்ட் 8ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியீடு செய்யப்படவுள்ளது. புகார்கள் இருக்குமானால் ஆகஸ்ட்9 முதல் 14ஆம் தேதி வரை புகார் அளிக்கலாம். மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படை வீரர்களுக்கு ஆகஸ்ட் 16 முதல் 18ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறவுள்ளது. ஆகஸ்ட் 2 முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை பொது கலந்தாய்வும், அக்டோபர் 15,16ஆம் தேதிகளில் துணைக் கலந்தாய்வும் நடைபெறவுள்ளது.
விடுபட்டவர்களுக்கான கலந்தாய்வு எஸ்சி பிரிவினருக்கு ஆகஸ்ட் 17, 18ஆம் தேதிகளிலும், முதல் 15,000 பேருக்கு முதல் வாரத்திலும் கலந்தாய்வு நடைபெறும். அவர்கள் ஒருவாரத்திற்குள் பணம் கட்டவில்லை என்றால், அந்த மாணவர்களின் சேர்க்கை ரத்து செய்யப்படும். 2 மாதத்தில் 4 சுற்றுகளில் கலந்தாய்வு முடிந்து, மாணவர் சேர்க்கை நடைபெறும். பொறியியல் கட்டணத்தில் மாற்றமில்லை. கடந்த ஆண்டு வசூலித்த கட்டணமே வசூலிக்கப்படும் என்றார்.
அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக தெரிவித்த அமைச்சர் பொன்முடி, இணையவழி மூலமாக ஜூன் 27 முதல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஜூலை 15ஆம் தேதி இறுதி. ஜூலை 25ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு என தனிக் குழு அமைக்கப்படும். கொரோனாவால் பல கல்லூரிகளில் பட்டமளிப்பு விழா தாமதமாகியுள்ளது. அண்ணா பல்கலையில் விரைவில் பட்டமளிப்பு விழா நடத்தப்படும். வங்கிகள் கல்விக் கடன் அளிக்க வலியுறுத்தியுள்ளோம் என்றார்.
-ம.பவித்ரா








