சிந்து சமவெளி நாகரிகத்துக்கு இணையாக கொண்டாடப்படும் திராவிட நாகரிகத்தின் தற்கால மையமாக தமிழ்நாடு விளங்குகிறது. இம்மையத்தின் தலைநகரான சென்னையின் முக்கிய மேம்பலங்களில் ஒன்றான அண்ணா மேம்பாலம் தற்போது திராவிடத்தை பறைசாற்றும் அடையாளங்களுள் ஒன்றாக மாற இருக்கிறது.
சென்னையின் அடையாளத்தில் மிக முக்கியமானது அண்ணா மேம்பாலம். இதற்கென தனி வரலாறு உண்டு. இப்பாலத்தை சுற்றி இலக்கியங்கள், திரைக்கதைகள், கலைஞர்கள், அரசியல்வாதிகள், சமகால அரசியல் என வரலாற்று சுவடுகள் எப்போதும் இருக்கும். தமிழகத்தின் சாலை வீதிகளில் கட்டப்படட முதல் மேம்பாலமான இது குதிரை வீரனுடன் தனித்து விடப்பட்டிருந்த நிலையில் தற்போது 50வது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு தயாராகியுள்ளது.
ஜெமினி பிரிட்ஜ் என்று அழைக்கப்படும் அண்ணா மேம்பாலம் 50 வயதை வெற்றிகரமாக தொட்டுள்ளதை தமிழ்நாடு அரசு சிறப்பாக கொண்டாட முடிவெடுத்துள்ளது. எப்பொழுதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் மவுண்ட் ரோட்டை (தற்போதைய அண்ணா சாலை) சென்னை மாநகரின் உயிர்நாடி என்றே சொல்லலாம். புனித ஜார்ஜ் கோட்டை முதல் பரங்கி மலை வரை 15 கி.மீ நீளம் கொண்ட இந்த சாலையில் முக்கிய அரசு அலுவலகங்களும், வணிக கட்டடங்களும் அமைந்துள்ளன. சென்னை மாநகரின் மையப்பகுதியாக விளங்கும் இந்த சாலையில்தான் அதிக வாகன போக்குவரத்தும் நடைபெறுகிறது. போக்குவரத்து நெரிசலும் அதிகம் காணப்படும் சாலையும் இதுதான்.
சென்னையின் பிரதான இடங்களான தி.நகர், தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, கதீட்ரல் சாலை ஆகிய இடங்களுக்கு செல்லும் சாலைகள் கூடும் இடமாக இருந்தது ஜெமினி ஸ்டூடியோ அமைந்திருந்த பகுதி. அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படும் பகுதியாக இருந்ததால், நெரிசலை குறைப்பதற்காக ரூ. 66 லட்சம் செலவில் 1971ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 21 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டதுதான் அண்ணா மேம்பாலம்.
250 அடி நீளமும் 48 அடி அகலமும் கொண்ட இந்த மேம்பாலத்தை 1973ம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் மு. கருணாநிதி திறந்து வைத்தார். இதுவே தமிழகத்தின் முதல் மேம்பாலம் என்ற பெருமைக்குரியது. அதேபோல் இந்தியாவின் மூன்றாவது மேம்பாலமாகவும் திகழ்ந்தது. மேம்பாலம் திறந்து வைக்கப்படடபோது அதற்கு சூட்டப்பட்டது முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் பெயர்தான். ஆனால் மேம்பாலத்தின் அருகே ஜெமினி ஸ்டுடியோஸ் இருந்ததால் நாளைடைவில் ஜெமினி பிரிட்ஜ் என்று அழைக்கத் தொடங்கி அதுவே தொடர்ந்து வருகிறது.
சென்னையின் அடையாளமாக திகழும் இந்த அண்ணா மேம்பாலம் தற்போது 50வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. இதனையொட்டி, மேம்பாலம் ரூ.9 கோடி செலவில் புதுப்பிக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி அண்ணா மேம்பால சந்திப்பில் கதீட்ரல் சாலை செல்லும் பகுதியில் பல்லவர் கால பாணியில் செதுக்கப்பட்ட 6 அடி உயர சிங்க சிலை அமைக்கப்படவுள்ளது. மேம்பாலத்தின் ஒவ்வொரு நுழைவு பகுதி, வெளியேறும் பகுதிகள் என 8 இடங்களில் அழகிய கல் தூண்களும் அமைய இருக்கின்றன. இதற்காக மதுரையை சேர்ந்த டிராட்ஸ்கி மருது வடிவமைப்பு கலைஞராக ஒப்பந்தமாகியுள்ளார்.
மேலும், மேம்பாலத்தின் அருகே புல் தரைகளில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் அழகிய தமிழ் எழுத்துக்களும், தமிழகத்தின் வரலாற்றை பறைசாற்றும் வகையில் கலை வடிவத்துடன் கூடிய சிற்பங்களும் நிறுவப்பட இருக்கின்றன. பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரது பொன்மொழிகளும் தூண்களில் செதுக்கப்படுவதுடன், மேம்பால பக்கவாட்டு சுவர்களில் தமிழ் நாகரிகம், திராவிட அரசியலின் அடையாளங்களை பிரதிபலிக்கும் சிற்பங்கள், ஓவியங்கள் போன்ற அழகிய வேலைப்பாடுகளும் அமையவிருக்கின்றன. இவற்றுடன் அண்ணா மேம்பாலம் அருகே உள்ள அமெரிக்க தூதரகம் பகுதியில் விசா பெறுவதற்காக நடைமேடையில் காத்துக்கிடக்கும் பொதுமக்களின் வசதிக்காக இருக்கை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
– சோனியா








