அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியின் மனு தள்ளுபடி! உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!

லஞ்சம் வாங்கி கைதான அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது. திண்டுக்கல்லில் மருத்துவர் ஒருவரிடம் வழக்கை முடித்து தருவதாக கூறி,  ரூ.20 லட்சம்…

லஞ்சம் வாங்கி கைதான அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.

திண்டுக்கல்லில் மருத்துவர் ஒருவரிடம் வழக்கை முடித்து தருவதாக கூறி,  ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்ச ஒழிப்புப் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.  அங்கித் திவாரியிடம் பல மணி நேரம் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரை திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படியுங்கள் : ‘இந்தியா’ கூட்டணியில் 20 நாட்களுக்குள் தொகுதிப் பங்கீடு!

இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு அமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரி கடந்த 12-ம்  தேதி ஆஜர்படுத்தப்பட்டார்.  அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை அனுமதி கேட்டது. இருப்பினும், 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனையடுத்து அங்கித் திவாரியை விசாரணைக்காக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அழைத்துச் சென்றனர்.

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யபட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி மேலூரை சேர்ந்த வழக்கறிஞர் விவேக் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் சக்திவேல் ஆகியோர்  சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி சிவஞானம் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் அரசின் குற்றவியல் தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜரானார். அப்போது அவர், கைது செய்யப்பட்ட  அங்கித் திவாரியை விசாரித்ததில் இந்த வழக்கில் மேலும் சில அதிகாரிக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து,  இரண்டு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என நீதிபதி சிவஞானம் தெரிவித்தார். 

இந்நிலையில்,  அரசுத் தரப்பின் கோரிக்கைகளை ஏற்ற நீதிமன்றம், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.