பாமகவில் இருந்து நீக்கப்பட்டது குறித்து ஜி.கே. மணி கூறியது என்ன.?

கட்சியில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத அன்புமணிக்கு, என்னை  கட்சியிலிருந்து நீக்க அதிகாரம் இல்லை என்று ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.

பாமகவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து இரு தரப்பினரும் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கட்சி விரோத செயல்களில் ஈடுபடுவதாக கூறி பாமகவின் (ராமதாஸ் தரப்பு)  எம்.எல்.ஏ.  ஜி.கே. மணியை கட்சியை விட்டு நீக்குவதாக அன்புமணி ராமதாஸ் இன்று அறிவித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே. மணி,  ”ஆலமரமான ராமதாஸுடன் கருவியாக இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். எந்த கட்சியுடனும் கூட்டணிப் பேச்சுவார்த்தையை துவங்கவில்லை.. ராமதாஸ் நல்ல முடிவு எடுப்பார்.

கட்சியில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாதவர் அன்புமணி என்னை எவ்வாறு கட்சியிலிருந்து நீக்க முடியும். நீக்குவதற்கு அதிகாரம் இல்லை மனம் நொந்து சொல்கிறேன். அன்புமணியை அரசியலுக்கு கொண்டு வரவேண்டும் என்று சண்டை போட்டு வாதாடியவன் நான். பாட்டாளி மக்கள் கட்சியின் அடிமட்ட தொண்டர் முதல் பொறுப்பாளர்கள் வரை ஜிகே. மணி மீது யாரும் குற்றச்சாட்டு வைக்க மாட்டார்கள்.

தற்போது பாமகவின் நிலை என்ன என்று அனைவருக்கும் தெரியும். வலிமையான கட்சியான பாமக தற்போது நிலைகுலைந்து போய்விட்டது. பாமகவின் நிலை தலைகீழாக மாறிக்கொண்டிருக்கிறது.  அன்புமணி ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்று அனைவரும் பேசத் தொடங்கி விட்டார்கள். பாமக என்று சொல்லாதீர்கள் தனது புகைப்படத்தை பயன்படுத்தாதீர்கள் என்று ராமதாஸ் சொல்லிவிட்டார்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.