சமையல் கலைஞர் செஃப் தாமு இன்று காலமானார். அவரின் மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் தங்களது அஞ்சலியை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பாமக தலைவர் அன்புமணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “24 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து உணவு வகைகளை சமைத்து சாதனை படைத்த சமையல் கலை வல்லுனர் செஃப் தாமு உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
சமையல் கலை வல்லுனர் தாமுவை பல ஆண்டுகளாக நான் அறிவேன். எனக்கு நன்றாக அறிமுகம் ஆனவர். ‛குக் வித் கோமாளி’ உள்ளிட்ட அவரது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நான் மிகவும் விரும்பி பார்ப்பேன். எவராலும் வெறுக்க முடியாத அளவுக்கு அனைவரிடத்திலும் அன்பு காட்டக் கூடியவர். நகைச்சுவை உணர்வு கொண்டவர். சமையல் கலையில் ஏராளமான சாதனைகளை அவர் படைத்திருக்கிறார். இந்தியாவின் புகழ்பெற்ற நட்சத்திர விடுதிகளில் பணியாற்றியவர். சமையல் கலை பேராசிரியராகவும் பணி செய்துள்ளார். 2010ஆம் ஆண்டில் தொடர்ந்து 24 மணிநேரம் 30 நிமிடங்கள் 12 வினாடிகள் தொடர்ந்து சமையல் செய்த அவர், 617 விதமான உணவு வகைகளை படைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
சமையல் கலைக்கு அவரது பங்களிப்பை அங்கீகரித்து பாராட்டும் வகையில் கடந்த ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அப்போதும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தேன். கடந்த சில வாரங்களுக்கு முன் அவர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மீண்ட போது, அவருக்கு இனி எந்த ஆபத்தும் இருக்காது என்று நிம்மதி அடைந்தேன். ஆனால், இப்போது அவர் நம்மை விட்டு பிரிந்து விட்டதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. சமையல் கலை வல்லுனர் செஃப் தாமுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், சமையல் கலைத் துறையினர், தொலைக்காட்சி ஊடகத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




