“இஸ்ரோ தனியார்மயமாகாது! தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படத் திட்டம்!” – தலைவர் நாராயணன்!

இந்திய விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிக்கவும், விண்வெளி ஆய்வுப் பணிகளை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார்.

தனியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஒன்றில் கலந்துகொண்ட இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார். விழாவில் பேசிய அவர், “தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் சிறிய செயற்கைக்கோள் ஏவுகலன்களுக்கான (SSLV) பிரத்யேக விண்வெளி ஏவுதள வளாகம் அமைக்கப்பட உள்ளது. உலக அளவில் அதிகரித்து வரும் செயற்கைக்கோள் ஏவுதல் தேவையைப் பூர்த்தி செய்வதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இஸ்ரோ தனியார்மயமாக்கப்படாது எனத் தெளிவுபடுத்திய நாராயணன், விண்வெளித் துறையில் அதிகரித்து வரும் உள்நாட்டு மற்றும் சர்வதேச தேவைகளைச் சமாளிக்கத் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது அவசியம் எனக் குறிப்பிட்டார். விண்வெளித் துறையில் செயல்படும் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இஸ்ரோ தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் என்றும், இதன் மூலம் பொருளாதார வளர்ச்சியுடன் ஆயிரக்கணக்கான உயர் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளும் உருவாகும் என்றும் தெரிவித்தார்.

2029-ஆம் ஆண்டுக்குள் நான்கு ஏவுதளங்கள் செயல்பாட்டுக்கு வரும் என்றும், வணிக ரீதியிலான விண்வெளிச் செயல்பாடுகளில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரிக்கப்படும் என்றும் அவர் கூறினார். குலசேகரப்பட்டினத்தில் அமையவுள்ள புதிய விண்வெளி ஏவுதள வளாகத்தில் செயற்கைக்கோள்களை ஒருங்கிணைக்கும் கட்டடங்கள், ஏவுதளங்கள், ரயில் பாதை அமைப்புகள், தொலைஅளவீடு, கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு வசதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் இடம்பெறும் எனத் தெரிவித்தார். இருப்பினும், திட்டமிடப்பட்டுள்ள மற்ற மூன்று ஏவுதளங்கள் குறித்த கூடுதல் விவரங்களை அவர் வெளியிடவில்லை.

ககன்யான் திட்டம்: ஆளில்லா சோதனை விரைவில்!

இந்தியாவின் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் கீழ், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் முதல் ஆளில்லா சோதனை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, விண்வெளி வீரர்களை அனுப்புவதற்கு முன்பாக மேலும் இரண்டு ஆளில்லா சோதனைகள் நடத்தப்பட உள்ளன.

இந்தச் சோதனைகளின்போது விண்கலத்தின் சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு அமைப்புகள், பாதுகாப்பு வசதிகள், அவசரகாலத்தில் விண்வெளி வீரர்கள் வெளியேறும் அமைப்புகள் மற்றும் விண்கலத்தின் உட்புற வசதிகள் ஆகியவை வெவ்வேறு அழுத்தம், வெப்பநிலை மற்றும் ஈரப்பதச் சூழல்களில் பரிசோதிக்கப்படும் என அவர் விளக்கினார்.

ககன்யான் திட்டத்திற்காக இதுவரை சுமார் 8,000 தரைநிலைப் பரிசோதனைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், விண்வெளிப் பயணத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நான்கு விண்வெளி வீரர்களும் தற்போது சிறப்புப் பயிற்சி பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

சந்திரயான்-5 திட்டத்திலும் இந்தியா – ஜப்பான் கூட்டணி!

எதிர்கால விண்வெளித் திட்டங்கள் குறித்துப் பேசிய நாராயணன், ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து சந்திரயான்-5 திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். இந்தத் திட்டத்தின் கீழ், சுமார் 350 கிலோ எடையுள்ள ரோவர் நிலவுக்கு அனுப்பப்பட்டு, அங்கு 100 நாட்கள் வரை ஆய்வுகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நிலவு குறித்த ஆராய்ச்சியில் இந்தியா தனது அடுத்தகட்ட முன்னேற்றத்தை நோக்கிப் பயணிக்கும்” என அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.