சென்னையில் கருணாநிதி பெயரில் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதற்கான நூற்றாண்டு தொடக்க விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் கருணாநிதி நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். விழாவில் சிறப்பு விருந்தினராக மகாத்மா காந்தி மற்றும் ராஜாஜியின் பேரனும், மேற்குவங்க முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி கலந்து கொண்டார்.
இதனை தொடர்ந்து கருணாநிதி நூற்றாண்டு விழா இலச்சினையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் மனங்களில் இன்றும் கருணாநிதி வாழ்கிறார் என தெரிவித்தார். தனது தலைமையிலான திராவிட மாடல் அரசை கருணாநிதிக்கு காணிக்கையாக்குகிறேன் எனக் கூறிய அவர், கருணாநிதி திமுகவின் சொத்து அல்ல என்றும், உலக தமிழர்களின் சொத்து எனவும் குறிப்பிட்டார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில்தான் தொழில் தொடங்குவோம் என சிங்கப்பூர், ஜப்பான் நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்த அவர், உலக தரம் வாய்ந்த பன்னாட்டு மையம் சென்னையில் அமைக்கப்படும் என அறிவித்தார். 25,000 ஏக்கர் பரப்பளவில் 5,000 பார்வையாளர்கள் அமரும் வகையில் சர்வதேச பன்னாட்டு மையம் அமையும் என்றும், உலகளாவிய தொழில் கண்காட்சிகள், திரைப்பட நிகழ்வுகள் அங்கு நடைபெறும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா









