எகிப்து அதிபருக்கு குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு

டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் எகிப்து அதிபர் அல் சிசிக்கு  திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். நாட்டின் 74வது குடியரசு தின விழா நாளை நாடு முழுவதும் வெகு…

டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் எகிப்து அதிபர் அல் சிசிக்கு  திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நாட்டின் 74வது குடியரசு தின விழா நாளை நாடு முழுவதும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. டெல்லியில் நடைபெறும் விழாவுக்கான ஏற்பாடுகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இதையடுத்து டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி அழைக்கப்பட்டுள்ளார். நமது நாட்டின் குடியரசு தின விழாவுக்கு எகிப்து அதிபர் ஒருவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கலந்து கொள்வது இதுவே முதல் முறை ஆகும். அது மட்டுமின்றி குடியரசு தின அணிவகுப்பில் எகிப்து படைப்பிரிவும் கலந்து கொள்கிறது.

இந்தநிலையில் டெல்லியில் நாளை 74வது குடியரசு தின விழா நடைபெறுகிறது. இதில் ஏறத்தாழ 65 ஆயிரம் பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி தலைநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக எகிப்து அதிபர் சிசி 3 நாள் பயணமாக நேற்று டெல்லி வந்தார். இன்று காலை குடியரசு தலைவர் மாளிகைக்கு வந்த பத்தா எல்- சிசிக்கு சிறப்பான சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியுடன் பத்தா எல்-சிசிக்கு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இச்சந்திப்பின்போது, வேளாண்மை, எண்மம் (டிஜிட்டல்), வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு உறவை மேம்படுத்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதிபர் எல்- சிசியை வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இதுகுறித்து எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல் சிசி கூறுகையில், இந்த மகத்தான நாளுக்காக இந்திய தேசத்திற்கும், அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் எனது வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். கெளரவ விருந்தினராக கலந்து கொள்வது மற்றும் புகழ்பெற்ற தேசிய தினத்தில் பங்கேற்பது ஒரு பெரிய பாக்கியம்.

எகிப்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் சமநிலை மற்றும் உறுதியான தன்மையால் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஆக்கபூர்வமான வளர்ச்சியை மட்டுமே நாம் கண்டுள்ளோம். நாங்கள் அனைவரும் மிகவும் நேர்மறையாக பரிணமித்து வருகிறோம் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.