முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் மக்களவை உறுப்பினருமான ரவீந்திரநாத்தை அதிமுகவிலிருந்து நீக்கியதற்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது இரண்டு மகன்களான ரவீந்திரநாத், ஜெயபிரதீப்பை அதிமுகவிலிருந்து நீக்கினார். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் ரவீந்திரநாத் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதற்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் என்கிற பெயரில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களவையில் அதிமுகவின் ஒரே உறுப்பினரை கட்சியின் சார்பில் செயல்படுவதை தடுக்கும் நடவடிக்கைகளை அதிமுக தொண்டர்கள் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் எனக் கூறியுள்ளார். இது ஒரு நியாயமற்ற செயல் என்றும், ஒரு மரத்தின் உச்சியில் உட்கார்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுவது போன்றது என்றும் சசிகலா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
எம்.ஜி,ஆர். என்கிற மாமனிதரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதா என்கிற பெண் சிங்கத்தால் பாதுகாக்கப்பட்டு வந்த இயக்கம் அதிமுக எனத் தெரிவித்துள்ள சசிகலா, சில சுயநலவாதிகள் மேற்கொண்ட தவறான முடிவுகளால் அதிமுக தனது பெருமைகள் ஒவ்வொன்றாக இழந்து வருகிறது என கட்சித் தொண்டர்கள் கண்ணீர் வடிப்பதாகவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஒரு சிலர் தனது தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்யும் எண்ணத்தில், தங்களை சுற்றியுள்ள சொந்த கட்சியினரை ஏமாற்றியதோடு மட்டுமல்லாமல், தங்களோடு கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த மற்ற கட்சியினரையும் ஏமாற்றியுள்ளதாக சசிகலா குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக அழிந்தாலும் பரவாயில்லை பதவியை எப்படியாவது தட்டிப் பறிக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் எண்ணம் தவறானது என்று வெளிப்படுகின்ற காலம் வந்துவிட்டதாகவும் சசிகலா தெரிவித்துள்ளார். உண்மையான தொண்டர்களின் பேராதரவோடு அதிமுக சீரோடும் சிறப்போடும் செழிக்க இருப்பதாகவும் சசிகலா தாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.