சென்னை தலைமைச் செயலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பானது ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “சமீபத்தில் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்ததாக கூறினார்.
தமிழக அரசு 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக செயல்பட்டு வருவதற்கு வாழ்த்து தெரிவித்த அவர், இந்த ஆட்சி 5 ஆண்டுகளும் எவ்வித இடையூறுமின்றி தொடர விசிகவின் முழு ஆதரவு எப்போதும் இருக்கும் என கூறினார். அனைத்து அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலிடம் வழங்கியதற்காக முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்து, நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகளிடையே வேறுபாடுகள் இருந்தாலும், மாநில உரிமைகளுக்காக தமிழர்கள் அனைவரும் ஒரே அணியில் நிற்கிறோம் என்பதை ஒன்றிய அரசுக்கு உணர்த்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றியதற்கும் பாராட்டு தெரிவித்தார்.
உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 125 தீர்மானங்களின் நகலை முதலமைச்சரிடம் திருமாவளவன் ஒப்படைத்தாகவும், மாநில சுயாட்சியை வலியுறுத்துவதே இந்தத் தீர்மானங்களின் முக்கிய நோக்கம் என அவர் தெரிவித்தார். பேரறிஞர் அண்ணா வழியில் தற்போதைய அரசும் மாநில சுயாட்சிக்கான குரலை வலுவாக எழுப்ப வேண்டும். சாதி ஒழிப்பு, மதச்சார்பின்மை, மாநில சுயாட்சி மற்றும் தேசிய இனங்களின் ஐக்கியத்தை முன்னிறுத்துவதே தமிழ் தேசியம் என்றார்.
மேகமலை பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் விவசாய மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தக் கூடாது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, மக்கள் நலன் கருதி தமிழக அரசு உடனடியாக சீராய்வு மனு தாக்கல் செய்து அவர்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும். அமுதன் படுகொலை சம்பவத்தின் பின்னணியில் போதைப்பொருள் புழக்கம் இருப்பதாக பெற்றோர்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். எனவே, இந்த வழக்கை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும், ஒழிக்கவும் போதைப்பொருள் ஒழிப்பு அதிரடிப்படையை அரசு உடனடியாக உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
சமூகச் சிக்கல்கள், வன்முறை மற்றும் படுகொலைகளுக்கு ஒரு குறிப்பிட்ட ஆட்சியை மட்டும் பொறுப்பாக்க முடியாது என தெரிவித்தார். சட்டம்-ஒழுங்கை கட்டுப்படுத்துவதில் சமூக ஆர்வலர்களுக்கும் பொறுப்பு உள்ளது என்றும், மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்க முதலமைச்சர் தனிப்பட்ட முறையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். விசிகவின் வீரியமும் அழுத்தமான குரலும் எந்த இடத்திலும் குறையவில்லை என்றும், நீர்த்துப்போகவில்லை என்றும் தெரிவித்தார்.
திட்டமிட்டு சிலர் பரப்பும் அவதூறுகளுக்கு மத்தியில், மக்களின் பார்வையில் இருந்து முடிவுகளை எடுத்து, அவர்களின் உரிமைகளுக்காக விசிக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாக கூறினார். ஆளுங்கட்சியுடன் இணைந்து பயணிப்பதுடன், தாங்களும் ஓர் ஆளும் கட்சி என்ற அடையாளத்தைப் பெற்றுள்ளதாக தெரிவித்தார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்த பிறகு கூட்டணி தொடர்பான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக் கூட்டங்கள் ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் உறுதி அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.




