தேனியில் கைதிகள் தப்பியோடிய விவகாரம் : மேலும் இருவர் கைது!

தேனியில் தப்பியோடிய கைதிகளில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, தேக்கம்பட்டி அருகே தேனி மாவட்ட சிறை செயல்பட்டு வருகிறது. 4 பிளாக்குகளாக அமைந்துள்ள இந்தச் சிறையில் 100-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் 3-வது பிளாக்கில் இருந்த சிறைவாசி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டதாகத் தகவல் வந்தது. இதையடுத்து, சிறப்பு சார்பு ஆய்வாளர் மதன்மோகன் சிறைப் பிளாக்கின் கதவைத் திறந்துள்ளார். அப்போது, சிறிது நேரத்திலேயே அந்தப் பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்த 17 சிறைவாசிகள் தப்பியோடினர். மேலும், அவர்கள் சிறைக்காவலர்கள் இருவரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே தப்பியோடிய சிறைக்கைதிகளை போலீசார் 17 தனிப்படைகள் அமைத்து தேடி வந்த நிலையில் 4 கைதிகள் பிடிபட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் ட்ரோன்களின் உதவி கொண்டு அருகாமையில் உள்ள காடுகளில் தேடி வந்தனர். இதனை தொடர்ந்து நேற்று மாலை 17 சிறைவாசிகளில் 5 சிறைவாசிகளை காவல்துறையினர் கைது செய்த நிலையில் மேலும் 8 சிறைவாசிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஐ.ஜி தகவல் தெரிவித்தார். ட்ரோன் கேமராக்கள் வழியாக கண்காணிப்பு பணியில் 8 சிறைவாசிகள் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தப்பி ஓடிய 17 சிறைவாசிகளில் 13 சிறைவாசிகள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் தப்பியோடிய கைதிகளில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதனால், மொத்த கைது எண்ணிக்கை 15 ஆக உயர்ந்து உள்ளது. தப்பியோடியவர்களில் மீதமுள்ள 2 பேரை தேடும் பணி நடந்து வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார், 50-க்கும் மேற்பட்ட நக்சல் தடுப்பு பிரிவு போலீசாரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.