மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உலக பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் கடைசியாக கடந்த 2009-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வருகிற செப்.17-ஆம் தேதி காலை 7.45 மணி முதல் 8.10 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது.
மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வீரவசந்தராயர் மண்டபத்தில் கடந்த 2018-ல் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் சேதமடைந்த மண்டபத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் கோவில் முழுவதும் வர்ணம் பூசும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள முக்குறுணி விநாயகர் சன்னதியில் இருந்து சுவாமி சன்னதிக்கு செல்லும் பிரகாரத்தில், குழந்தைகளுக்கு பாலுாட்டும் அறை அருகேயுள்ள கல் துாண் ஒன்றின் அலங்கார போதிகை உடைந்து விழுந்தது.
பக்தர்கள் யாரும் அச்சமயத்தில் அங்கு இல்லாததால் யாருக்கும் பாதிப்பில்லை.
தினந்தோறும் ஏராளமானோர் வந்து செல்லும் இப்பிரகாரத்தின் கற்தூணின் மேற்பகுதி இடிந்து விழுந்தது பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பாபிஷேகத்திற்காக கோயில் சிற்பங்கள், துாண்களை யொட்டி சாரம் கட்டப்பட்டது. அப்படி சாரம் கட்டியதால் கல்துாணின் அலங்கார பகுதி வலு விழந்து விழுந்ததா ? என கோயில் நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.







