“கைவிரல் ரேகை பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொருட்கள் வழங்கப்படும்” – தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் e-KYC மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொருட்கள் வழங்குவது முடக்கப்படமாட்டாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

எந்தவொரு குடும்ப அட்டைதாரருக்கும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதை நிறுத்தவோ / தடை செய்யவோ கூடாது என அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்கள் உதவி ஆணையர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “எந்தவொரு குடும்ப அட்டைதாரருக்கும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை நிறுத்தவோ / தடை செய்யவோ கூடாது என அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்கள் /உதவி ஆணையர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசு, 6 மாதங்களுக்கு மேல் நியாய விலைக்கடைகளில் பொருட்கள் வாங்காத முன்னுரிமை (PHH) குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்குவதை அக்டோபர் 1 2026 முதல் தற்காலிகமாக தடை செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முன்னுரிமை குடும்ப அட்டை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரர்களின் e-KYC சதவீதம் 96.69% ஆகும். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் 10.05.2026 முதல் 02.08.2026, 08.08.2026, 09.08.2026, 29.08.2026, 19.09.2026 மற்றும் 26.09.2026 ஆகிய தேதிகளில் e-KYC சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்கள் மூலமாக, ஜூலை மாதத்தில் 95.44 சதவீதமாக இருந்த e-KYC சரிபார்ப்பு, செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி அன்று 96.69 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த சிறப்பு முகாம்களின் மூலமாக 4,49,663 முன்னுரிமை (PHH) மற்றும் AAY திட்டப் பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர்.

எனினும் e-KYC பணியினை மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள். நியாய விலைக்கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்லும்போது, கைவிரல்ரேகை /கண்கருவிழி சரிபார்ப்பின் மூலம் தங்களது e-KYC தகவல்களை விரைந்து பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.