அம்மா உன்னை மிஸ் செய்கிறேன் என கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அயனாவரம் நாட்டு முத்தையால் கன் தெருவை சேர்ந்தவர் கலா. இவர் சென்னை மாநகராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளராக வேலை செய்து வருகிறார் .இவருக்கு வெங்கடேஷ், விஜய் என இரு மகன்கள் உள்ளனர் விஜய் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டின் அருகே உள்ள தனியார் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடையில் வாட்டர் வாஷ் செய்யும் வேலை செய்து வருகிறார் .நேற்று காலை 9 மணிக்கு கலா வியாசர்பாடியில் உள்ள தேவாலயத்துக்கு சென்றுவிட்டு மதியம் ஒரு மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து கலா உள்ளே சென்று பார்க்கும் போது ஹாலில் மின்விசிறியில் சேலையால் விஜய் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த அயனாவரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விஜய்யின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .
மேலும் விஜய்யின் வீட்டை அவரது உறவினர்கள் சோதனை செய்தபோது அவர் கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று இருந்தது. அதில் விஜய் வேலை செய்த இடத்தில் அவர் ஒரு பொருளை எடுத்து விட்டதாகவும், அதனை அந்த ஷோரூம் மேனேஜர் சுனில் என்பவர் கண்டு பிடித்து அனைவரும் முன்னிலையில் முட்டி போட வைத்து அடித்ததாகவும் எழுதியுள்ளார். அதனால் என் சாவிற்கு மேனேஜர் சுனில் தான் காரணம் எனவும் அம்மா உன்னை மிஸ் பண்றேன் எனவும் உருக்கமாக கடிதத்தில் எழுதி வைத்திருந்தார். கடிதத்தை கைப்பற்றிய அயனாவரம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







