சேலத்தில் அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்து நடத்துனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து செட்டிசாவடி பகுதிக்கு அரசுப் பேருந்து,
பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றுவிட்டு திரும்புவது வழக்கம். இந்த பேருந்தில்
வீராசாமி புதூரை சேர்ந்த சீனிவாசன் என்பவர் ஓட்டுனராகவும் மற்றும் நாமக்கல்
மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் நடத்துனராகவும் பணியாற்றி வருகின்றனர்.
இதேபோன்று இன்றும் செட்டிசாவடிக்கு சென்ற நகரப் பேருந்தில் நடத்துனர்
ராஜேந்திரன் பயணிகளை ஏற்றி உள்ளார். பின்னர் வழக்கம்போல் பேருந்து புறப்பட்டபோது படிக்கட்டின் அருகே நடத்துனர் ராஜேந்திரன் பயண சீட்டுகளை கொடுத்து வந்த நிலையில் திடீரென பேருந்து முன்பாக நாய் குறுக்கே சென்றதால் ஓட்டுநர் உடனடியாக பிரேக் பிடித்துள்ளார்.
அப்பொழுது நடத்துனர் ராஜேந்திரன் நிலைத் தடுமாறி பேருந்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதனால் பின் தலைபகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவரை அரசு பேருந்தில் ஏற்றிக்கொண்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்.
அப்போது உடனடியாக மருத்துவர்கள் வந்து நடத்துனர் ராஜேந்திரனை பரிசோதித்தபோது ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கன்னங்குறிச்சி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்.








