சென்னை நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சென்னையில் பருவமழைக்காலங்களில் நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலை நீடித்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் சென்னை உள்பட பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வரும் மழைக்காலத்தில் சென்னையில் தண்ணீர் தேங்காமல் இருக்க மாநகராட்சி மழைநீர் வடிகால் பணிகள் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
சென்னையில் முக்கிய நகரங்களில் ஒன்றான நுங்கம்பாக்கத்தில் உள்ள சுரங்கபாதையில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும். இதனை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையில் பருவமழைக் காலத்தில் தேங்கும் மழைநீரில் ஒரு நிமிடத்திற்கு 11,700 லிட்டர் அளவிற்கு மழைநீரை வெளியேற்றும் அளவிற்கு மோட்டார் பம்புகளின் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மாநகரில் உள்ள 15 சுரங்கப்பாதைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சுரங்கப்பாதைகளில் மழைக்காலங்களில் தேங்கும் மழைநீரானது மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றப்படுகிறது.
இதில் அதிகப் போக்குவரத்து நெரிசல் கொண்ட தேனாம்பேட்டை மண்டலம், நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையில் வருகின்ற வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீரை வெளியேற்ற கூடுதல் மோட்டார் பம்புகள் அமைக்கப்பட்டு மழைநீர் வெளியேறும் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது
நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையில் ஏற்கனவே 10 குதிரைத் திறனுடன் நிமிடத்திற்கு 1500 லிட்டர் மழைநீரை வெளியேற்றும் திறன் கொண்ட 2 மோட்டார் பம்புகளும். 7.5 குதிரைத் திறனுடன் நிமிடத்திற்கு 1000 லிட்டர் மழைநீரை வெளியேற்றும் திறன் கொண்ட 1 மோட்டார் பம்பு 20 குதிரைத் திறனுடன் நிமிடத்திற்கு 3,500 லிட்டர் மழைநீரை வெளியேற்றும் திறன் கொண்ட மோட்டார் பம்பும் நிறுவப்பட்டு மழைக்காலங்களில் மழைநீர் வெளியேற்றப்பட்டு வந்தது. மழைக்காலங்களில் மின்தடை ஏற்பட்டால் இந்த மோட்டார் பம்புகளை இயக்க ஏதுவாக 625 KVA திறன் கொண்ட ஜெனரேட்டரும் நிறுவப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது சென்னையில் மிக அதிக கனமழை பெய்த காரணத்தினால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதை சாலையானது.மழைநீர் தேங்கி போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது.
எனவே, வருகின்ற பருவமழையை எதிர்கொள்ள ஏதுவாக சுரங்கப்பாதையிலிருந்து மழைநீரை வேகமாக வெளியேற்ற கூடுதலாக 22 குதிரைத் திறனுடன் நிமிடத்திற்கு 4,200 லிட்டர் மழைநீரை வெளியேற்றும் திறன் கொண்ட நீரில் மூழ்கக்கூடிய மோட்டார் பம்பு புதியதாக பொருத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையில் கடந்த காலங்களில் 47.5 குதிரைத் திறனுடன் நிமிடத்திற்கு 7,500 லிட்டர் மழைநீரை வெளியேற்றும் திறனுடன் இருந்த மோட்டார் பம்புகளின் செயல்திறன் தற்சமயம் கூடுதலாக பொருத்தப்பட்ட மோட்டார் பம்பின் மூலம் 69.5 குதிரைத் திறன் மற்றும் நிமிடத்திற்கு 11,700 லிட்டர் மழைநீரை வெளியேற்றும் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.







