எட்டு வயதில் மேடை ஏறி கர்நாடக இசைப் பாடலை பாடிய அந்த பாடகர் உலகம் முழுவதும் பல ஆயிரம் கச்சேரிகளை நடத்திய பெருமைக்குரியவர். அவர் யார் தெரியுமா…
1964ம் ஆண்டு வெளியான கலைக்கோயில் என்ற திரைப்படத்தில் தங்க ரதம் வந்தது வீதியிலே என்ற பாடலின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் பாலமுரளி கிருஷ்ணா. ஆனால் கடவுள் மறுப்பாளர்களையும், தனது தமிழால் கட்டி ஆண்ட ஏ.பி.நாகராஜன் இயக்கிய திருவிளையாடல் திரைப்படத்திற்காக சற்று செருக்குடன், கர்வமாக பாடும் ஒரு நாள் போதுமா என்ற பாடல் அவரை பிரபலமாக்கியது. மதுரை பாண்டிய மன்னனை வீழ்த்த எண்ணிய ஹேமநாத பாகவதராக நடித்த டி.எஸ்.பாலையாவுக்காக பாடிய பாடலில், “காணடா…என் பாட்டு தேனடா… இசைதெய்வம் நானடா பாடலில் கம்பீரம் மேலோங்கி நிற்கும்…
ஆந்திராவில் இசைக் குடும்பத்தில் பிறந்த முரளிகிருஷ்ணா 6 வயதில் மேடையேறி, கர்நாடக இசைப்பாடலை பாடியவர். உலகம் முழுவதும் 18 ஆயிரம் கச்சேரிகளை நடத்திய பெருமைக்குரியவர். தென்னிந்திய மொழிகள் உட்பட 8 மொழிகளில் பாடல்களைப் பாடும் திறமையுடன் விளங்கிய அவர், நாட்டின் மிகச்சிறந்த பத்ம விருதுகளை பெற்றுள்ளார். திருவையாறு தியாகராஜ சுவாமி உற்சவத்தில் தனது பதினோராவது வயதிலேயே ஒன்றரை மணி நேரம் பாடியிருக்கிறார். இவருக்காக பெரிய இசை வித்வான்கள் தங்கள் நேரத்தை விட்டுக் கொடுத்தனர்.
திரையுலகில் பின்னணி பாட வாய்ப்பு வந்தபோது, பாலமுரளி கிருஷ்ணாவிடம் பயிற்சி பெற்றதாக தெரிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன், நடிகை வைஜெயந்தி மாலா, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இசைப்பயிற்சி அளித்துள்ளார் பாலமுரளி கிருஷ்ணா. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் 400-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். கவிக்குயில் திரைப்படத்தில் இடம்பெற்ற சின்னக் கண்ணன் அழைக்கிறான் பாடல் இன்றளவும் மனதை கட்டியாள வைக்கிறது.
பல ராகங்களையும் பல புதிய தாளங்களையும் உருவாக்கிய பாலமுரளி கிருஷ்ணா மறைந்தாலும் தனது பாடல்களால் நிலைத்து நிற்கிறார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







