“அமீர்.. மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு…” – இயக்குநர் சேரன் பதிவு!

“அமீர்.. மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு…. காலம் நூறு கடந்தாலும் பணமும் புகழும் கண்ணை மறைத்தாலும் அவர்களை உருவாக்கியவன் நீயே.. திமிராய் இரு..” என நடிகரும், இயக்குநருமான சேரன் தனது எக்ஸ் தள…

“அமீர்.. மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு…. காலம் நூறு கடந்தாலும் பணமும் புகழும் கண்ணை மறைத்தாலும் அவர்களை உருவாக்கியவன் நீயே.. திமிராய் இரு..” என நடிகரும், இயக்குநருமான சேரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பருத்திவீரன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, அத்திரைப்படத்தை இயக்கிய அமீர் தன்னை ஏமாற்றிவிட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். இது சமூக வலைதள பக்கங்களில் பேசுபொருளானது.

இதற்கு மறுப்பு தெரிவித்து இயக்குநர் அமீர் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், பருத்தி வீரன் திரைப்படம் உருவாக பண உதவியளித்த இயக்குநர் சசிகுமாரும் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.  இதனைத் தொடர்ந்து இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி, இயக்குநர் பாரதிராஜா, கரு.பழனியப்பன், கவிஞர் சினேகன்  உள்ளிட்டோர் அமீருக்கு ஆதரவாக  குரல் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாக இயக்குநரும், நடிகருமான சேரன் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “அமீர்.. மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு…. காலம் நூறு கடந்தாலும் பணமும் புகழும் கண்ணை மறைத்தாலும் அவர்களை உருவாக்கியவன் நீயே.. திமிராய் இரு.. நீயின்றி அவர்களில்லை என்ற கர்வம் மட்டும் போதும் .. உண்மையும் சத்தியமும் வெல்லும். காலம் எல்லா களங்கத்தையும் துடைக்கும்.

படைப்பாளிகளின் பாவம் சுமக்காதீர்கள். அமீரின் நேர்மையையும், உண்மையும், நாணயமும் நான் நன்கறிந்தவன் என்ற முறையில் நீங்கள் சொன்ன வார்த்தை முற்றிலும் பொய்யானது. கண்டிக்கிறேன் உங்களை. கார்த்தியும் சூர்யாவும் இந்நேரம் உம் தவறை கண்டித்திருக்கவேண்டும்.” என்று ஆதரவாக பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.