பட்டியல் இனமக்கள் செல்வ விநாயகர் மற்றும் உச்சி காளியம்மன் கோயிலுக்குள் சென்று வழிபட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் சித்தரேவு கிராமத்தை சேர்ந்த மணி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், பட்டியல் இனமக்கள் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்க கோரியும், கோவிலுக்குள் அனுமதிக்காத உயர்வகுப்பினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில், கடவுள் வழிபாட்டில் சாதிய பாகுபாடுகளை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது. கடவுள் அனைவருக்கும் பொதுவானவர். சாமி கும்பிடுவதில் எந்த பாகுபாடும் பார்க்கக் கூடாது என்பதில் அரசு தெளிவாக உள்ளது. இதுபோன்று சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த வழக்கிலும் அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்த நீதிபதிகள், பட்டியல் இனமக்கள் செல்வ விநாயகர் மற்றும் உச்சி காளியம்மன் கோயிலுக்குள் சென்று வழிபட அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தனர். மேலும் இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர்சாதி வகுப்பைச் சேர்ந்த மோதில் ராம், சின்னச்சாமி, ராமசாமி ஆகியோர் எழுத்துப்பூர்வமான பதிலை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.







