தவெக பெண் வேட்பாளரை மு.க. ஸ்டாலின் உருவக்கேலி செய்ததாக குற்றச்சாட்டு – தேர்தல் ஆணையத்திடம் புகார்!

தவெக பெண் வேட்பாளர் சத்தியபாமாவை உருவக்கேலி செய்து இழிவுபடுத்திப் பேசியதாக மு.க. ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் அக்டோபர் 6 -ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, அக்டோபர் 2 -ஆம் தேதி (நேற்று) தாராபுரத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் வேட்பாளர் சத்தியபாமாவைக் குறிப்பிட்டு, விமர்சனங்களை முன்வைத்தார். அது உருவக்கேலி செய்யும் வகையில் இருந்ததாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக, தவெக மாநில வழக்கறிஞர் அணி ஒருங்கிணைப்பாளர் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: தேர்தல் நடத்தை விதிகள், பிரதிநிதித்துவச் மக்கள் சட்டம் 1951, தமிழ்நாடு பெண்களைத் துன்புறுத்துதல் தடைச் சட்டம், 1998 மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா, 2023 ஆகியவற்றின்படி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு 06.10.2026 அன்று நடைபெற உள்ளது. 09.09.2026 முதல் அத்தொகுதியில் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளன. தவெக சார்பில் சத்தியபாமா இத்தேர்தலில் போட்டியிடுகிறார். தி.மு.க. சார்பில் 02.10.2026 அன்று தாராபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரப்புரை செய்தார்.

அக்கூட்டத்தில் மு.க ஸ்டாலின் எமது கட்சியின் பெண் வேட்பாளரைக் குறிப்பிட்டு உருவகேலி செய்யும் வகையில் பேசியுள்ளார்.” இது அவரது கொள்கை, செயல்பாடு, அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனம் அல்ல முழுக்க முழுக்க தனிநபர் தாக்குதல் ஆகும். இவ்வாறு அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.