வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின்கீழ் நியூஸ் க்ளிக் நிறுவனம் தொடர்பான 2 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
நியூஸ் க்ளிக் நிறுவனம் சட்டவிரோதமாக வெளிநாடுகளிலிருந்து நிதி பெற்று செயல்பட்டு வந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அந்த நிறுவனத்தில் சோதனை நடத்தியது. இதுதொடர்பாக நியூஸ் க்ளிக் நிறுவனம் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
இதனை விசாரித்த நீதிமன்றம் நியூஸ் க்ளிக் நிறுவனத்தின் மீதும், அதன் ஆசிரியர் பிரபீர் புர்கயாஷ்தா மீதும் அமலாக்கத் துறை நடவடிக்கை இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ‘நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் ‘நியூஸ் க்ளிக் நிறுவனத்துக்கு சீனாவிடமிருந்து நிதி வருவதாக செய்தி வெளியானது.
இதைத் தொடர்ந்து, அமலாக்கத் துறை ‘நியூஸ் க்ளிக் நிறுவனம் மீதான தனது விசாரணையை தீவிரப்படுத்தியது. மேலும் அமெரிக்காவை சேர்ந்த நெவில்லி ராயிடம் இருந்து பணம் பெற்றதாகவும், சீனாவுக்கு ஆதரவாக இந்தியாவில் செய்திகளை வெளியிடுவதற்காக இந்தப் பணம் வழங்கப்பட்டதாகவும் அந்த நிறுவனம் மீது புகார் எழுந்தது.
இதனிடையே அமலாக்கத்துறையின் தகவலின் படி டெல்லி போலீசார் கடந்த 8 நாட்களுக்கு முன்பு நியுஸ் கிளிக் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அந்த நிறுவனத்துடன் தொடர்புடைய 30 இடங்களில் சோதனை நடைபெற்றது. அந்நிறுவனத்தில் பணிபுரியும் 6 பத்திரிகையாளர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
பின்னர் டெல்லியில் உள்ள நியூஸ்கிளிக் நிறுவனத்தின் அலுவலகத்திற்கு டெல்லி போலீசார் சீல் வைத்தனர். புர்கயாஸ்தா மற்றும் நியூஸ் கிளிக்கின் மனித வளத் தலைவர் அமித் சக்ரவர்த்தி மீது UAPA தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
ஏற்கனவே புர்காயஸ்தாவின் சொத்துக்களை முடக்கப்பட்டுள்ளன.2019 பொதுத் தேர்தலை நாசப்படுத்த ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மைக்கான மக்கள் கூட்டணி என்ற குழுவுடன் பிரபீர் புர்காயஸ்தா சதி செய்ததாகவும், சீன நிறுவனங்கள் வெளிநாட்டு நிதியைப் புகுத்துவதற்காக ஷெல் நிறுவனங்களை இணைத்ததாகவும் டெல்லி காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனிடையே நியூஸ் கிளிக் நிறுவனம் மீது FCRA சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள சிபிஐ, இன்று இரு இடங்களில் சோதனை நடத்தி வருகிறது. நியூஸ் கிளிக்கின் நிறுவனர் பிரபீர் புர்கயஸ்தாவின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடைபெறுகிறது.







