2026-27-ஆம் ஆண்டுக்காண தமிழ்நாடு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். இந்த நிலையில் இன்றைய கூட்டத்தொடர் நிறைவடைந்ததை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, “இந்த பட்ஜெட்டுக்கு ஜீரோ மதிப்பெண் தான் கொடுக்க முடியும். இந்த அரசு கொடுத்த வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என நாங்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறோம். மாற்றம் மாற்றம் என பெயர் மாற்றம் மட்டும்தான் செய்துள்ளார்கள்.
கடந்த ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு ஸ்டிக்கர் மட்டும் தான் ஒட்டி உள்ளார்கள். பெயர் மாற்றம் செய்வதற்கு ஏன் ஒரு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தேர்தல் வாக்குறுதி போல் அறிவிக்கவில்லை அரசு மருத்துவமனைகளில் பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு மட்டும் இந்த திட்டம் செயல்படும் என இன்று பட்ஜெட்டில் அறிவிக்கிறார்கள். அனைத்து திட்டங்களும் திமுகவில் கொண்டு வந்த திட்டங்கள். இந்தியாவில் தமிழ்நாடு மாநிலம் முதல் மாநிலமாக உள்ளது என பெருமையாக சொல்கிறார்கள்.
முதல்வர் படைப்பகம் என்ற திட்டத்தில் டிஜிட்டல் உலகம் என மாற்றப்பட்டுள்ளது. கல்வி சுகாதாரம் தொழில் வளர்ச்சி போன்றவை கடந்த ஆட்சி பட்ஜெட்டில் இடம் பெற்றது. 48,500 கோடி ரூபாய் கல்விக்கு திமுக ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த ஆட்சியில் கல்விக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது.
ஆடிப்பெருக்கு நாளில் கூட தண்ணீர் வராத நிலை இந்த அரசால் ஏற்பட்டுள்ளது. இந்த ஆட்சி அமைந்த பிறகு 3 மாதங்களாக விவசாயிகள் பாதித்துள்ளார்கள். தஞ்சாவூர் நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்து எடுத்துரைத்தோம். அந்தப் போராட்டத்திற்காக என்னை வீடு புகுந்து கைது செய்தார்கள். மேலும் திமுக சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்து வருகிறார்கள்.
இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. லாக் அப் மரணம் அதிகரித்து வருகிறது பழனி கோவில் மோசடி பார்த்து இந்த தமிழ்நாடு அசந்து போய் உள்ளது. மின்சாரப் பிரச்சனை தொடர்ச்சியாக உள்ளது. நீட்டை எதிர்த்து இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து கேட்டால் முதலமைச்சர் பதில் கூற மாட்டார். இந்த பேரவையில் தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளை கேள்வி எழுப்ப உள்ளோம். இந்த கேள்விகளுக்கு அரசு பதில் கூற வேண்டும்




