அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில், ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை பெற்றுத்தர அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என மக்களவை திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு
அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில், ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு நடப்பாண்டு முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, டெல்லியில் மக்களைவை திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி, நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, 27 சதவீத இடஒதுக்கீட்டை பெற முழு முயற்சி மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, டி.ஆர்.பாலு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து, பேசிய விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், சமூகநீதி வரலாற்றில் தமிழ்நாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாகக் கூறினார். அகில இந்திய அளவில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என எந்த மாநில அரசும் கோரிக்கை விடுக்கவில்லை என கூறிய அவர், இதனை பெற்று தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.
அடுத்து பேசிய மாணிக்கம் தாகூர் எம்.பி, மற்றவர்களின் வெற்றிக்கு மோடி அரசு ஆதாயம் தேடுவதாக குற்றம்சாட்டினார். இடஒதுக்கீடு வழங்கப்பட்டது தங்களின் சட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் கூறினார்.







