துணிவு பட கொண்டாட்டத்தின் போது லாரி மீது ஏறி நடனமாடியதில் கீழே விழுந்து முதுகு தண்டில் பலத்த காயம் ஏற்பட்டு அஜித் ரசிகர் உயிரிழந்தார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அஜித்குமார் நடிப்பில், இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் துணிவு. இந்த திரைப்படம் இன்று நள்ளிரவு 1 மணிக்கு தமிழகம் முழுவதும் வெளியானது. சென்னையில் உள்ள பிரபர திரையரங்கான ரோகிணி திரையரங்கில் நடிகர் அஜித்தின் துணிவு, நடிகர் விஜய்யின் வாரிசு ஆகிய இரு திரைப்படங்களும் இன்று வெளியிடப்பட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அஜித் ரசிகர்கள் நேற்று இரவு முதலே ரோகிணி திரையரங்கில் குவிந்த வண்ணம் இருந்தனர். பெரிய பெரிய கட்அவுட்கள், பேனர்கள், வைத்து, மாலை அணிவித்து, பால் அபிஷேகம் செய்து கொண்டாடினர். இது பொங்கலா? தீபாவளியா? என சந்தேகப்படும் அளவிற்கு பட்டாசுகளை வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஆட்டம் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அஜித் நடித்த துணிவு திரைப்படத்தை ரோகிணி திரையரங்கில் பார்க்க வந்த ரசிகர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெதுவாக சென்று கொண்டிருந்த லாரி ஒன்றின் மீது நடனம் ஆடியபடி கீழே குதித்த போது கீழே விழுத்தார். இதில் அவரது முதுகுத்தண்டில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதைதொடர்ந்து அந்த ரசிகரை அருகில் இருந்தவர்கள் கே.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்தில் அந்த ரசிகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த அந்த ரசிகர் சென்னை சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவை சேர்ந்த பரத்குமார் வயது 19 என்று தெரியவந்துள்ளது.
இந்த விபத்துக் குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.