சிங்கப்பூரில் இருந்து மதுரை வந்த பயணி தவறவிட்ட கைப்பையில் இருந்த 40
ஆயிரம் பணம் மற்றும் பாஸ்போர்ட் ஆவணங்களை பத்திரமாக மீட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் கருப்பசாமி அதனை ஒப்படைத்தார்.
மதுரை அழகப்பன் நகர் சேர்ந்த சண்முகசுந்தரம் (வயது 62) பல வருடம் கழித்து சிங்கப்பூரிலிருந்து சென்னை வழியாக காலை 10:30 மணி அளவில் மதுரை வந்தடைந்தார். அப்போது விமான நிலையத்தில் இமானுவேல் சேகரன் குரு பூஜை முன்னிட்டு அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் வருகை தந்ததால் ஏராளமான கூட்டமும் பரபரப்பாக இருந்தது.
அப்போது சண்முகசுந்தரம் தனது உடமைகளை காரில் ஏற்றும் போது சூட்கேஸ் மற்றும் இதர சாமான்களை ஏற்றி விட்டு பாஸ்போர்ட், பணம் மற்றும் ஆவணங்கள் நிறைந்த கைப்பையை தள்ளுவண்டியில் வைத்துவிட்டு சென்றுவிட்டார்.
இதை அடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படை பிரிவை சேர்ந்த வீரர் கருப்பசாமி தள்ளு வண்டியில் கைப்பை இருப்பதை பார்த்து சோதனை செய்துள்ளார். அதில் சண்முகசுந்தரத்தின் பாஸ்போர்ட், இந்திய பணம் 38,000, சிங்கப்பூர் பணம் மற்றும் ஆவணங்கள் ஆகியவை இருந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அவரை தொலைபேசி மூலம் அழைத்து, விமான நிலைய பயணிகள் முனைய அலுவலகத்தில் வைத்து அவருடைய கைப்பை ஒப்படைக்கப்பட்டது. பணம் மற்றும் பாஸ்போர்ட் மீண்டும் கிடைத்ததில் சண்முகசுந்தரம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களின் சேவையை
பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.







