தென்காசி முதியோர் இல்லத்தில் 3 பேர் உயிரிழப்பு… 8 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி – உணவு ஒவ்வாமை காரணமா?

தென்காசி சுந்தரபாண்டியபுரம் முதியோர் காப்பகத்தில், உணவு ஒவ்வாமை காரணமாக 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அன்னை
முதியோர் இல்லத்தில் 60க்கும் மேற்பட்ட முதியவர்கள் தங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த முதியோர் இல்லத்தில் நேற்றிரவு உணவருந்திய சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அவர்களை தென்காசி அரசு மருத்துவமனைக்கு அன்னை இல்ல நிர்வாகம் அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளது. முதற்கட்டமாக 11 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், 3 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். செங்கோட்டை பகுதியை சேர்ந்த சங்கர் கணேஷ் (வயது 48), முருகம்மாள் (வயது 45), சொக்கம்பட்டி பகுதியை சேர்ந்த அம்பிகா (வயது 40) ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர்.

மேலும் இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற 6 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், மாவட்ட சுகாதார அலுவலர் கோவிந்தன், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் புஷ்பராஜ் மற்றும் மருத்துவர்கள் முதியோர் இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து முதியோர் காப்பகத்தில் இருந்த மாற்றுத்திறனாளிகள்,  பார்வை திறன் குறைவுடையோர் உட்பட 14 ஆண்கள், 24 பெண்கள் உள்பட 42 பேர், 5க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். சுந்தரபாண்டியபுரத்தில் இந்த முதியோர் இல்லம் கடந்த 8 ஆண்டுகளாக செயல்பட்டு வருவதாகவும், பாட்டா குறிச்சியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் இந்த முதியோர் இல்லத்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதியோர் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த முதியோர் 3 பேர், உணவு ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.