கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடலாமா என்பது குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் அதிமுகவின் கர்நாடகா மாநில செயலாளர் எஸ்.டி. குமார் தலைமையில் ஏப்ரல் 2 ஆம் தேதி பெங்களூரில் நடைபெற்றது.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் வரும் 13ம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கர்நாடக மாநிலத்திற்கான தேர்தல் ஒரே கட்டமாக மே 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன. 224 சட்டமன்ற தொகுதிகளில் சுமார் 50 தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் வாக்காளர்களாக தமிழர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடலாமா? என்பது குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் அதிமுகவின் கர்நாடகா மாநில செயலாளர் எஸ்.டி. குமார் தலைமையில் பெங்களூரில் இன்று நடைபெற்றது
சுமார் 300 நிர்வாகிகளிடம் கருத்துக்கேட்கப்பட்ட நிலையில், பெரும்பாலான நிர்வாகிகள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று தெர்வித்தனர். மேலும் தேர்தலில் போட்டியிட்டால் 10 தொகுதிகளிலாவது அதிமுக வேட்பாளர்கள் நிறுத்தப்பட வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர்.
கர்நாடகா நிர்வாகிகளிடம் பெறப்பட்ட கருத்துக்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவிக்கப்படவுள்ளது. இதனையடுத்து எடப்பாடி பழனிசாமியின் முடிவுகளின் அடிப்படையில் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







