திமுக அரசை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!!

போலி மதுபானங்களால் இறப்பு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருட்கள் புழக்கம், ஊழல் முறைக்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் மாவட்ட தலைநகரங்கள் தோறும் மாபெரும்…

போலி மதுபானங்களால் இறப்பு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருட்கள் புழக்கம், ஊழல் முறைக்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் மாவட்ட தலைநகரங்கள் தோறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் விஷ சாராயம் குடித்து 22 பேர் இறந்ததற்கு கண்டனம் தெரிவித்து, தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஆளும் திமுக அரசை கண்டித்து தமிழக மற்றும் புதுவையில் பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில், மதுரை, சேலம், புதுக்கோட்டை, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

சென்னை தாம்பரம் சண்முகம் சாலையில் முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் கள்ளச்சாராய இறப்பு, போதை பொருட்கள் விற்பனை உள்ளிட்டவை அதிகரித்து விட்டதாக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே, அதிமுக எம்.பி. சிவி சண்முகம் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலி மதுபான விற்பனை, ஊழல் முறைகேடுகள் தமிழ்நாட்டில் அதிகரித்து விட்டதாகவும் அதனை தடுக்க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டினர்.

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து, உயிரிழந்த விவகாரத்தில், திமுக அரசை கண்டித்து மதுரையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலூர் அடுத்த வெள்ளரிப்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர். அப்போது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகவும், கள்ளச்சாராயம் விற்பனையை அரசு தடுக்க தவறிவிட்டதாகவும் குற்றச்சாட்டி முழக்கங்களை எழுப்பினர்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர். அப்போது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகவும், கள்ளச்சாராயம் விற்பனையை அரசு தடுக்க தவறிவிட்டதாகவும் குற்றச்சாட்டி முழக்கங்களை எழுப்பினர்.

கலாச்சாராய விவகாரம், ஊழல் முறைகேடு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, உள்ளிட்டவற்றை
கண்டித்து திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் அதிமுகவினர் ஒப்பாரி வைத்து நூதன போராட்டம் நடத்தினர். அப்போது கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளை சித்தரிக்கும் வகையில் நடித்துக் காட்டினர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் புறநகர் மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி அருண்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர். அப்போது கோவையில் கனிமவள கொள்ளை அதிகரித்து விட்டதாக குற்றச்சாட்டிம் தமிழ்நாடு அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்கினார். அப்போது அதிமுகவினர் திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

திமுக அரசைக் கண்டித்து, கன்னியாகுமரியில் அதிமுக அவை தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது திமுக அரசின் கடந்த இரண்டு ஆண்டு கால ஆட்சியில், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளதாகவும், கள்ளச்சாராயத்தைத் தடுக்கத் தவறிவிட்டதாகவும் முழக்கங்களை எழுப்பினர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.