அதிமுக யாருக்கும் அடிமையில்லை – எடப்பாடி பழனிசாமி அதிரடி

அதிமுக யாருக்கும் அடிமையில்லை என்றும், திமுக தான் அடிமையாக உள்ளது எனவும் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம், ஆத்தூரில் மாற்று கட்சியினர், அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி, அக்கட்சியின்…

அதிமுக யாருக்கும் அடிமையில்லை என்றும், திமுக தான் அடிமையாக உள்ளது எனவும் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம், ஆத்தூரில் மாற்று கட்சியினர், அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு எந்த புதிய திட்டங்களும் கொண்டு வரப்படவில்லை. வரி மேல் வரி போட்டு மக்கள் மீது சுமையை ஏற்றி உள்ளதால் திமுக அரசின் சாதனை. மின் கட்டணத்தை வழங்கு உயர்த்திய தமிழக அரசு மக்களைப் பற்றி கவலை படாத அரசாக உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஒரு ரவுடியை போல் பேசுகிறார். அவர் பேசும் போது வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். எட்டு கோடி மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது. அடித்தால் திருப்பி அடிப்பேன் என ரவுடியை போல் பேசக்கூடாது.

சேலம் மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கியது அதிமுக ஆட்சியில் தான். மக்களுக்காக உழைக்கும் ஒரே கட்சி அதிமுக தான். அடிப்பட்ட பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மக்கள் பிரச்சினையை அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லும் பணியை சிறப்பாக செய்து வருகிறது. கூட்டணி என்பது அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு, தேர்தல் நேரத்தில் அமைக்கப்படுகிறது. அதிமுக யாருக்கும் அடிமை இல்லை. திமுக தான் தற்போது அடிமை கட்சியாக செயல்படுகிறது. தமிழகம் புதுவை உட்பட 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும் சூழல் பிரகாசமாக உள்ளது. அதற்காக தொடர்ந்து தீவிரமாக பணியாற்றி வருகிறோம். நீட் வரக்கூடாது என அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நீட் தேர்வுக்கு எதிராக நீதிமன்றம் வரை சென்று போராடியது அதிமுக தான்.

அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. ஸ்டாலினால் குற்றம் சாட்டப்பட்டவர் தான் செந்தில் பாலாஜி. அமலாக்கத்துறை பலமுறை சமன் அனுப்பியும் ஆஜர் ஆகாத காரணத்தினால் தான் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். சோதனைக்கு வந்த வருமான வரி அதிகாரிகளை செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் தாக்கிய போது முதலமைச்சர் ஏன் அறிக்கை விடவில்லை. ஊழல் புரிந்து கைது செய்யப்பட்டவரை அமைச்சராக வைத்திருப்பதே தவறு. சிறை கைதிக்கான நம்பர் அளிக்கப்பட்டவர் அமைச்சராக தொடர்வது மோசமான முன்னுதாரணம். செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து விலக்க வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்ந்தால் மக்கள் எப்படி மதிப்பார்கள்?. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. 8 கோடி மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும், நடிகர் விஜய்யின் நேற்றைய அரசியல் பேச்சு குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய எடப்பாடி பழனிசாமி “ஜனநாயக நாட்டில் அரசியல் பேச அனைவருக்கும் உரிமை உண்டு” என கூறினார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.