அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் நாளை ஆலோசனை

அதிமுகவில் எழுந்த ஒற்றைத் தலைமை விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக நாளை காலை 10 மணிக்கு அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தவுள்ளனர். இந்தக் கூட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்…

அதிமுகவில் எழுந்த ஒற்றைத் தலைமை விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக நாளை காலை 10 மணிக்கு அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

இந்தக் கூட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அறிக்கை தலைமை நிலையச் செயலாளர் பெயரில் வெளியாகியுள்ளது. இதுவரை ஒருங்கிணைப்பாளர்கள் பெயரில் வெளியிடப்பட்டு வந்த அறிக்கை இன்று தலைமை நிலைய செயலாளர் பெயரில் வந்துள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சமீபத்தில் கூட்டம் நடைபெற்றபோது அலுவலக வாயிலில் ஒற்றைத் தலைமை கோரி சிலர் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒற்றைத் தலைமை விவகாரத்தில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் பலரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் அதிமுக பொதுக் குழு, செயல்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வழிநெடுகிலும் அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக வரவேற்றனர். அந்தக் கூட்டத்தில் பங்கேற்றபோது பாதியிலேயே ஓபிஎஸ் வெளியேறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுகவின் பொதுசெயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இரட்டைத் தலைமைகளாக கட்சியை வழிநடத்த தொடங்கினர். 2017 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு அவருக்கான அதிகாரங்கள் ஒருங்கிணைப்பாளர்கள் இருவருக்கும் வழங்கும் வகையில் சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டன.

இருப்பினும், காலச்சூழலுக்கு ஏற்ப அதிமுகவை வழிநடத்த ஒற்றை தலைமை தேவை என கட்சி நிர்வாகிகள் முடிவு செய்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கல் தெரிவித்தன. இந்த பரபரப்பான சூழ்நிலையில் நாளை அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.