ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் சென்னை அயப்பாக்கம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாடு மக்கள் அனைவரும் முகம் சுழிக்கும் வைகையில் அதிமுக பொது குழுவில் எந்த நிகழ்வும் இந்த முறை போல் வரலாற்றில் நடந்தது இல்லை. அதிமுகவின் பொதுக்குழுவை பார்த்த போது அம்மாவின் தொண்டனாக, அந்த இயக்கத்தில் பொருளாளராக இருந்தவன் என்ற முறையில் நான் வருத்தப்பட்டேன்.
பன்னீர் செல்வத்தை பாராட்டுகிறேன். நீதிபதி வடிவில் இந்த துரோகிகள் கனவில் மண்ணை அள்ளிப்போட்டு விட்டார்கள். கூடா நட்பு கேடாய் முடியும் என பன்னீர் செல்வத்திடம் சொன்னேன்.
அதிமுக பொதுக் குழுவில் கலந்து கொண்ட அனைவருக்கும் 4 கோடி கொடுக்கப்பட்டது. என் பெயரை சொல்லக் கூட யோசிப்பவர்கள் இன்றைக்கு என்னவெல்லாம் பேசுகிறார்கள்.
அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகாரை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைப்போம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால் அங்கு கோடிக்கணக்கில் புரளுகிறது.
நான் நன்றாக யோசித்து எடுத்த முடிவு தான் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம். தலையே இல்லாத இவர்கள் ஒற்றை தலைமைக்கு சண்டை போடுகின்றனர்.
தொடர்ந்து அம்மாவின் கொள்கைகளை, இலட்சியங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவே தொடங்கப்பட்ட இயக்கம் தான் அமமுக.
அதிமுகவில் உள்ள 90% பேர் என்னால் ஏதோ ஒரு வகையில் பதவி பெற்றவர்கள். சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் வெற்றி தோல்வி கண்டு பயப்படுபவர்கள் நாங்கள் அல்ல.
தவறானவர்கள் கையில் இந்த இயக்கம் மாட்டிக் கொண்டுள்ளது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர், அம்மா அவர்கள் வகித்த பதவியை பல கோடிகள் செலவழித்து, நிர்வாகிகளை வாங்கி அந்த பதவிக்கு வர நினைக்கிறார்கள். நல்ல வேளையாக நீதிமன்றம் தலையிட்டது. அம்மாவின் முகம் மறைந்து விடக் கூடாது என்பதற்காக அமமுக கொடியில் அம்மாவின் திருமுகத்தை பதித்தோம் என்றார் டி.டி.வி. தினகரன்.








