ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புகள் உள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மதுரை ஜான்சி ராணி பூங்காவில் பாரதிய ஜனதா கட்சி மகளிரணி சார்பில் மத்திய அரசு திட்டங்களால் பயனடைந்த மகளிர் பயனாளிகளுடன் செல்பி எடுக்கும் நிகழ்ச்சியில் தேசிய மகளிர் அணி தலைவி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பயனாளிகளுடன் செல்பி எடுத்து கொண்டார். 100 கோடி பயனாளிகளுடன் செல்பி எடுக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக மதுரையில் இந்நிகழ்வு நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் கூறியதாவது: மத்திய அரசின் திட்டத்தை பெற்ற பெண்களுடன் செல்பி எடுத்து நமோ செயலியில் பதிவிடும் திட்டம் இன்று நாடு முழுதும் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்களில் அதிகம் பேர் பெண் பயனாளிகளே உள்ளனர். பெண்கள் தலைமையேற்கும் விதமாக மத்திய அரசு திட்டங்கள் வழங்கி வருகிறது.
அண்மைச் செய்தி : கோடை காலத்தில் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள் – அறநிலையத்துறை உத்தரவு
தமிழகத்தில் 1 கோடி பெண் பயனாளிகளுடன் செல்பி எடுக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்வது பாஜகவின் கடமை. மத்திய அரசின் திட்டங்களை கிராமப்புற மக்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் சுனக்கமாக நடக்க கூடாது என நிதி கோரப்பட்டுள்ளது. பெண்கள் மீதான தாக்குதலில் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்புகள் உள்ளது. இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்தார்.







