அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் விளக்க மனுத் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தை எதிர் மனுதாரராக சேர்க்காமலேயே, அதன் செயல்பாடுகளுக்கு ஓபிஎஸ் முட்டுக்கட்டை விதித்து வருவதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் கூடுதல் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சூழலில், ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் விளக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் குறித்து இன்னும் முடிவு எட்டப்படாத பட்சத்தில் தேர்தல் ஆணையத்தை இந்த வழக்கில் மனுதாரராக சேர்க்க முடியாது எனவும், நீதிமன்றத்தை இபிஎஸ் தரப்பு தவறாக வழி நடத்த முற்படுகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது.







