அதிமுக அடிப்படை விதியே ஓபிஎஸுக்கு தெரியவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த நிலையில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெறும் என தலைமைக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி நடைபெறும் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லத்தக்கதல்ல என அறிக்கை விடுத்தார் ஓ.பன்னீர்செல்வம்.
இருந்தாலும் ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்ப்பையும் மீறி அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில், எடப்பாடி பழனிசாமி, தமிழ் மகன் உசேன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடந்துள்ளது.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் மொத்தமுள்ள 74 பேரில் 65 பேர் பங்கேற்றுள்ளனர். 4 பேர் வராத காரணம் குறித்து விளக்கம் அளித்துள்ளனர். ஆக 5 பேர் மட்டும்தான் வரவில்லை. அதிமுக சட்டவிதிகளில் தெளிவாக கூறப்பட்டுள்ளது ஒருங்கிணைப்பாளர்கள் இல்லாத சூழ்நிலையில் தலைமை கழகத்தை வழி நடத்த தலைமை கழக நிர்வாகிகள் உரிமை உண்டு. ஆலோசனைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுகுறித்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்” என்றார்.
அதிமுக அடிப்படை விதியே ஓபிஎஸ்ஸுக்கு தெரியவில்லை என்ற ஜெயக்குமார், “துரோகத்தின் அடையாளம் ஓ.பன்னீர்செல்வம். துரோகம் அவரது உடன்பிறந்த ஒன்று. ஓ.பன்னீர்செல்வம் பொருளாளர் பதவியில் நீடிப்பாரா மாட்டாரா என்பது உள்பட அனைத்து கேள்விகளுக்கும் ஜூலை 11ம் தேதி விடை கிடைக்கும்” என்றார்.







