சுற்றுலாத்துறை தனியார் மயமாகிறதா? – அமைச்சர் மதிவேந்தன் விளக்கம்

சென்னை ராயப்பேட்டையில், டூரிஸ் கைடுகளுக்கான 3 நாள் பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி அடுத்த மாதம், ஜூலை 28-ஆம் தேதி…

சென்னை ராயப்பேட்டையில், டூரிஸ் கைடுகளுக்கான 3 நாள் பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன்

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி அடுத்த மாதம், ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்டு 10-ஆம் தேதி வரையில் நடக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளைத் தமிழ்நாடு அரசு தனிக் குழு அமைத்து தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த போட்டியில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அணிகள் கலந்து கொள்கின்றன. இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதை முன்னிட்டு ஒலிம்பிக் பாரம்பரியம் போன்று தொடர் ஜோதி ஓட்டம் நடத்தப்படும் என்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு ஏற்கனவே அறிவித்து இருந்தது.

அதன்படி, செஸ் ஒலிம்பியாட்டின் முதல் ஜோதி ஓட்டம் டெல்லியில் கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது. இந்திராகாந்தி மைதானத்தில் இந்த ஜோதி ஓட்டத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டம், 40 நாட்கள் இந்தியாவில் உள்ள 75 நகரங்களில் வலம் வருகிறது. ஜூலை 27-ஆம் தேதி ஒலிம்பியாட் ஜோதி, மாமல்லபுரத்தை வந்தடையும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், சர்வதேச, வெளிமாநில சுற்றுலா பயணியரை ஈர்க்கும் வகையில், மாநில சுற்றுலாத்துறை தொடர் முயற்சி எடுத்துவருகிறது. அதன் ஒருபகுதியாகச் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டும் வகையில், டூரிஸ் கைடுகளை தயார்ப் படுத்துவதற்கான 3 நாள் பயிற்சி முகாமை சென்னை ராயப்பேட்டையில், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், “எல்லாருக்கும் எல்லாம்” என்பதே திராவிட மாடல், சுற்றுலாப் பயணிகளைக் கவனமாகக் கையாள வேண்டும். சுற்றுலா பயணியர் விரும்பும் வகையிலும், அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையிலும் கைடுகள் செயல்பட வேண்டும் எனக் கூறினார். மேலும், மொழியைப் புரிந்துகொள்ளும் வகையிலான, தெளிவான உரையாடல், வரலாற்று அறிவு, பொறுமை ஆகிய அம்சங்களை டூரிஸ் கைடுகள் பெற்றிருக்க வேண்டும், அதற்காகத்தான் இந்த பயிற்சி எனப் பேசினார்.

அண்மைச் செய்தி: ‘ஓபிஎஸ் பேனர் கிழிப்பு: அதிமுக கண்டனம்’

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சுற்றுலாத்துறை தனியார் மயமாகிறதா? என்ற கேள்விக்கு விளக்கமளித்தார். அப்போது, சுற்றுலாத்துறை தனியார்மயமாகிவருவதாகச் சொல்வது தவறு எனவும், அரசால் ரூ.2,000 கோடிக்குக் கப்பல் வாங்கி விடுவதெல்லாம் இயலாத காரியம் எனத் தெரிவித்தார். தொடர்ந்துபேசிய அவர், எதையெல்லாம் அரசால் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்ய முடியும்.

அரசால் செய்ய முடியாததை, தனியாருடன் இணைந்து செயல்படுத்தி வருகிறோம் எனவும், சென்னை – தூத்துக்குடி பயணியர் கப்பல் போக்குவரத்துக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறோம் எனக் கூறினார். மேலும், சென்னையிலிருந்து அருகாமையில் உள்ள இடங்களுக்குக் கடலில் படகு சேவையைத் தொடங்குவது குறித்தும் ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்த அவர், சுற்றுலாத்தலங்களில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது. அதேவேளையில் முகக்கவசம் அணிய வேண்டும், தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் உள்ளிட்ட அரசின் வழிகாட்டுதல்களைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.